தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள் Jeffersonville, Indiana USA 65-0801E 1இப்பொழுது நாம் தலைவணங்கி ஜெபம் செய்வோம். எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவரே, இயேசுவை மரித்தோரிலிருந்து நீர் உயிரோடெழுப்பி, இந்த இரண்டாயிரம் ஆண்டு காலமாய் அவர் எங்களுடன் ஜீவிப்பவராய் இருந்துகொண்டு, ஒவ்வொரு சந்ததியிலும் தமது வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறார். இப்பொழுதுள்ள அவருடைய திவ்விய பிரசன்னத்திற்காக உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இந்த எங்கள் வாழ்க்கை முடிவுற்ற பின்பு வரப்போகும் உலகத்தில் எங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்னும் நிச்சயத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம். ஆண்டவரே, அதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அந்த நம்பிக்கையானது எங்கள் ஆத்துமாக்களில் நங்கூரமிடப்பட்டு புயல் காலங்களில் அது அசையாததாயும் உறுதியாயும் நிலைத்திருக்கிறது. புயல்கள் வந்து, அலைகள் மோதும் போது, அவர் பேரிலுள்ள விசுவாசத்தின் மூலமாய் நாங்கள் எல்லா அலைகளையும் கடந்து செல்லமுடியும் என்று உணருகிறோம். தேவனே, வியாதியஸ்தர்க்கும் தேவையுள்ளவர்களுக்கும் ஊழியஞ் செய்வதற்காக நாங்கள் வந்திருக்கும் இவ்விரவில் எங்களுக்குதவி செய்யும், இன்றிரவு நாங்கள் இவ்விடம் விட்டு செல்லும் போது, பலவீனமுள்ள ஒருவர் கூட இருக்க வேண்டாமென்று ஜெபிக்கிறோம். இங்குள்ள ஒவ்வொருவரும், தொலைபேசியின் மூலமாய் இணைக்கப்பட்டுள்ள நாடுகளில் இருப்பவரும் - எல்லோருமே உம்முடைய திவ்விய வல்லமையினால் சொஸ்தமாவார்களாக. இந்த கட்டிடத்தை விட்டு ஒருவராவது இன்றிரவு பெலவீனமுள்ளவர்களாய் செல்ல வேண்டாம். மகத்தான நீதியின் சூரியன் தாமே, ஆரோக்கியம் தங்கியுள்ள தமது செட்டைகளை விரித்து எழும்பி, வார்த்தையை கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் விசுவாசம் என்னும் ஒளிக் கதிர்களை ஊடுருவச் செய்து, அவர்கள் பரிசுத்த ஆவியின் கிரியைகளைக் கண்டு, அவர் இன்னமும் ஜீவிக்கிறவராயிருக்கிறார் என்று உறுதியாய் அறிவார்களாக. பிதாவே, இந்த ஆசீர்வாதங்களை இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம், ஆமென். (நீங்கள் அமரலாம்). 2இன்றிரவு இங்கு வந்து ஜனங்களிடம் பேசுவதும், வியாயதிஸ்தருக்காக ஜெபிப்பதும் எனக்குக் கிடைத்த பெரும்பேறு என்று கருதுகிறேன். இந்த கூடாரத்தின் வெளியிடங்களில், நாடு முழுவதும் தொலைபேசியினால் இன்றிரவு இணைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டுள்ள அனைவரும் பரிசுத்த ஆவியால் நிறைந்து, இந்த பூமிக்குரிய - வாழ்க்கை முடிவு பெறும் வரைக்கும் அவருக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ வேண்டுமென்றும் ஜெபிக்கிறேன். அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகின்றனர். வரப்போகும் அந்த மகத்தான காலத்தில் அவர்கள் மரிக்கவே மாட்டார்கள். அந்த மகத்தான காலத்தை நாம் எதிர் நோக்கியிருக்கிறோம். 3ஒரு காரியம் என் சிந்தனையில் எழுகின்றது. நான் தடை செய்ய விரும்பவில்லை, சகோ. வேயில் இப்பொழுது இங்குள்ளார். நான் மறுபடியும் அவரை சந்திக்க சந்தர்ப்பமிராது. வேயில் அவர்களே, நான் டூசானுக்கு திரும்பி சென்ற பிறகு அந்த செய்திக் கைபிரதியை தங்களுக்கு அனுப்பட்டுமா? நான் அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்; முழுவதுமாக படித்து முடியவில்லை. நான் டூசானுக்குச் சென்றவுடனே அதை உங்களுக்கு அனுப்பித் தருகிறேன். இப்பொழுது ஒரு விளம்பரத்தை அறிவிக்க விரும்புகிறேன். இது விசேஷமாக எங்குமுள்ள சபைகளுக்கும், குறிப்பாக மேற்கு பகுதியிலுள்ள சபைகளுக்கும், வர விரும்பும் எங்குமுள்ளவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. நமது மதிப்பிற் குரிய சகோதரன் பெர்ரீ கிரீன்... இந்த தொலைபேசி இணைப்புக்கு காரணமானவர் அவரே. அவர் டூசானுக்கு வந்து நம்மை சந்தித்து, இங்கு வந்து ஒரு எழுப்புதலை ஆரம்பிக்க வேண்டுமெனும் எண்ணத்தை தேவன் அவருடைய இருதயத்தில் அருளியிருக்கிறார். அது நமக்கு உண்மையில் அவசியமாயுள்ளது. சகோ. பெர்ரீ டூசானில் இருப்பார். அவருடன் தொடர்பு கொள்ள விரும்பினால், நமது அலுவலகத்தை அணுகவும். அது ஆகஸ்டு 10 முதல் 13 வரை நடைபெறும். நீண்ட நாட்களாக இவ்வண்ணம் அவருடைய இருதயத்தில் குடிகொண்டு வந்துள்ளது. 'அதை இருதயத்திலிருந்து எடுத்துப் போடக் கூடிய ஒரே வழி, அதைச் செய்வதே' என்று நான் அவரிடம் கூறினேன். அவர் ஒரு கிறிஸ்தவ சகோதரன், தேவனுடைய உண்மையான ஊழியன். அவர் ரமாதா விடுதியிலோ அல்லது ஆண்டவர் அருளும் வேறெந்த இடத்திலோ ஊழியம் செய்யும் போது, டூசானிலுள்ள நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களென்று எனக்குத் தெரியும். அவருக்கு கூட்டத்தை நடத்த இன்னும் இடம் கிடைக்கவில்லை. சகோ. கிரீன் தேவனுடைய வார்த்தையை வியாக்கியானம் செய்து, வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்து, தேவனுடைய அபிஷேகத்தினால் ஏவப்படும் வேறெதையும் செய்யும் போது, நீங்கள் அங்கு சென்று அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும். 4சகோ, ஆர்மன் நெவில், சகோ. மான் இவர்களுடன் கொண்டுள்ள இந்த அருமையான ஜக்கியத்திற்காக அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். இவர்களுடனும் இங்கு குழுமியுள்ள மற்ற ஊழியக்காரருடனும் தொடர்பு கொண்டுள்ளமைக்காக நான் எவ்வளவு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவர்கள் இங்கு அடையாளம் கண்டு கொள்ளப்பட்டனர் என்று நினைக்கிறேன். நம் சபையும் நமது சபைக் குழுவும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளாமற்போனால், தேவன் உங்களை அவருடைய ஊழியக்காரராக அடையாளம் கண்டு கொண்டுள்ளார் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். கர்த்தர் உங்களை எப்பொழுதும் ஆசீர்வதிப்பாராக. 5ஒரு காரியத்தை அறிவிக்க வேண்டுமென்று ஒரு சிறு தாள் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அன்றொரு இரவு தர்மகர்த்தாக்கள், மூப்பர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று காலை சபைக்கு முன் படிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அப்படி செய்வது எங்கள் வழக்கம். தர்மகர்த்தாக்கள், மூப்பர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லோரையுமே திருப்திபடுத்த இயலாது. அந்த குழுவுக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. சம வோட்டு என்னும் நிலைமை வந்தாலன்றி, எனக்கு வோட்டுரிமை கிடையாது. அப்படி நேரும் பட்சத்தில் நான் இங்கு வந்து வோட்டு அளிக்க வேண்டும். சகோ. ஆர்மன் நெவில் இரண்டாம் வோட்டு பெற்றுள்ளார். ஆனால் அந்த குழுக்கள் எடுக்கும் முடிவுகளில் நாங்கள் கையொப்பமிட வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில் நாங்கள் சபையின் ஒரு பாகமாக இருக்கிறோம். அந்த குழுக்கள் எடுக்கும் முடிவுகளை நாங்கள் நூறு சதவீதம் ஆதரிக்கிறோம். ஏனெனில் அதற்காகத் தான் இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஏறெடுக்கும் தீர்மானங்கள் அவர்களுக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள செயலாகும். நான் எக்காரணத்தைக் கொண்டும் அத்தீர்மானங்களுக்கு மாறாக செல்ல முடியாது; அப்படி செய்யவும் மாட்டேன். வேறொரு காரியம், அதற்கு முரணாக எந்த தீர்மானத்தையும் செய்ய நான் அமெரிக்க ஜக்கிய நாடுகள் அரசங்கத்தாரால் தடை செய்யப்பட்டிருக்கிறேன். எனவே அவர்களுடைய தீர்மானங்களை மாற்றி அமைக்க தயவு கூர்ந்து என்னிடம் கேட்க வேண்டாம். அப்படி என்னால் செய்ய முடியாது. அதைக் குறித்து நான் எதையுமே கேட்கப் போவதில்லை. பாருங்கள்? எனவே அவர்களுடைய தீர்மானங்களை மாற்றி அமைக்க என்னிடம் கேட்காதீர்கள். அந்த குழுவைப் பார்த்தீர்களா? அவர்கள் தாம் தீர்மானம் எடுத்தனர். சரி. 6அடுத்த கூட்டத்தை வைக்க வேண்டுமானால், கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் நான்கு அல்லது ஆறு வாரங்களுக்குள் நான் மீண்டும் இங்கு வருவேன். அப்பொழுது ஒருக்கால் ஞாயிறு கூட்டம் ஒன்றை வைக்கலாம். “தேவன் தம்முடைய வார்த்தையில் வெளிப்படுதல்'' என்னும் தலைப்பில் இன்றிரவு பேசப் போகிறேன் என்று காலையில் நான் அறிவித்தேன். அதற்கு இன்றிரவு சமயமிராது. வெளிப்படையாய் கூறினால், அதற்கேற்ற குரலும் எனக்கில்லை. உள்ளில் எவ்வளவு கூட்டம் உள்ளதோ, அவ்வளவு கூட்டம் வெளிப்புறத்தில் உள்ளது. வாகனங்களில் அமர்ந்துள்ள ஜனங்களைக் கணக்கிட்டால், வெளிப்புறத்திலுள்ளவர்களின் எண்ணிக்கை ஒருக்கால் அதிகமாயிருக்கக் கூடும். நமது வானொலி ஒலிபரப்பின் சத்தம் சற்று அதிகமாக்கப்பட்டுள்ளது. ஆகையால் எல்லோருமே கேட்கலாம். நமது கூடாரத்திலுள்ள குறுகிய அலை ஒலிபரப்பின் பயனாய் ஒரு நகர ப்ளாக் (City Block) தள்ளியுள்ளவர்கள் வரை கேட்க முடியும். ஆனால் இங்கு வந்துள்ள கார்கள் அநேக நகர ப்ளாக்குகள் தள்ளியுள்ளன. வரிசை வரிசையாக கார்கள் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, நமது கூடாரத்தைச் சுற்றிலும் கார்கள் மயம். இன்றிரவு கூடாரத்தில் நெருக்கிக் கொண்டும், வெளியில் இருப்பதுமான ஜனங்களைப் போல இதுவரைக்கும் இருந்ததில்லை எனலாம். அநேகர் இடமில்லாததன் காரணமாக கார்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். எனவே, “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்'' என்பதை இது நமக்குக் காண்பிக்கிறது. இன்றிரவு இங்கு குழுமியுள்ள உங்களிடம் ஒன்றை கூற விரும்புகிறேன். இது பல நாட்டினர் கூடியுள்ள கூட்டமாகும். அமெரிக்காவிலுள்ள நாடுகளில் மூன்றில் இரண்டு பாகம் நாடுகளிலிருந்து ஜனங்கள் இங்கு வந்துள்ளனர். மட்டுமின்றி, ஜந்து அயல் நாடுகளிலிருந்து (ரஷ்யா உட்பட) பிரதிநிதிகள் வந்துள்ளனர். வெனேசுவேலா, ஜமய்கா போன்ற இடங்களிலிருந்து வந்துள்ள ஜனங்கள் இங்குள்ளனர். அவர்கள் தேவனுக்காக பசிதாகமுள்ளவராயிருக்கின்றனர், என்னே ஒரு அற்புதமான நேரம்! 7நாம் வேதம் வாசிப்பதற்கு முன்பு, எனக்காக நீங்கள் ஜெபம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். கர்த்தருக்கு சித்தமானால், தெய்வீக சுகமளித்தலின் பொருத்தத்தைக் குறித்து ஒரு சிறு செய்தியைக் கொண்டு வர முயல்கிறேன். இன்று காலை நாம் இரட்சிப்பைக் குறித்து பேசினோம். இன்றிரவு சில நிமிடங்கள் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து நாம் பேசிவிட்டு, ஜெப வரிசையை அழைத்து, ஜனங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். தொலைபேசியின் மூலமாய் இணைக்கப்பட்டவர்களுக்கும், கூடாரத்திலிருந்து இரண்டு மூன்று நகர ப்ளாக்குகள் தள்ளி பஸ்களிலும் கார்களிலும் அமர்ந்திருப்பவர்களுக்கும் நீங்கள் எங்கிருந்தாலும் இதை கூற விரும்புகிறேன். வியாதியஸ்தருக்காக ஜெயம் செய்யும் நேரத்தில், உங்களால் கட்டிடத்திற்குள் வர முடியாவிட்டால் உங்களால் முடியாது என்று நிச்சயமாகத் தெரியும். ஏனெனில் கதவண்டைகளிலும், எங்கும் ஜன நெருக்கடி அதிகமாயுள்ளது. எங்கு பார்த்தாலும் இடமேயில்லை. எனவே வெளியிலுள்ள நீங்கள் ஜெபம் செய்து, ஒருவர் மேல் ஒருவர் கைகளை வையுங்கள். தொலைபேசியின் மூலம் இன்றிரவு இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு போதகரும், தெய்வீக சுகமளித்தல் ஆராதனை நடந்து கொண்டிருக்கும் போது, தங்கள் தங்கள் சபையோருக்காக ஜெபம் செய்யட்டும். தேவன் சர்வ வியாபியாயிருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். இப்பொழுது படிப்பதற்கு முன்... 8நாம் ஜெபிப்பதற்கு முன்பாக நாம் தேவனுடைய வார்த்தையை படிக்க விரும்புகிறோம். சற்று முன்பு தான் நான் படிக்க எத்தனித்திருந்த வேத பாகத்தை மாற்றிக் கொண்டேன். இன்றிரவு நடக்கவிருக்கும் கூட்டத்தின் தன்மையை மனதில் கொண்டவனாய், அதற்கேற்றாற் போல், சற்று வேத வாக்கியத்தை மாற்றிக் கொண்டேன். அதை மாற்றவில்லை, தெய்வீக சுகமளித்தல் ஆராதனைக்கென, ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று கருதி, அதை சற்று ஒழுங்குபடுத்தினேன். இப்பொழுது நாம் பரி. லூக்கா 24ம் அதிகாரத்திற்கு திருப்புவோம். 24 ம் அதிகாரத்தின் 12-ம் வசனம் தொடங்கி 34-ம் வசனம் முடிய வாசிப்போம். அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்தாகும். பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி அதற்குள்ளே குனிந்து பார்க்கையில், சீலைகளை தனிப்பட்ட வைத்திருக்க கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக் கொண்டு போனான். அன்றையத் தினமே அவர்களில் இரண்டு பேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவும் என்னும் கிராமத்துக்குப் போனார்கள். போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங் குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள். இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்து போனார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்க முகமுள்ளவர்களாய் வழி நடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளுகிற காரிங்கள் என்னவென்று கேட்டார். அவர்களில் ஒருவனாகிய கிலேயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாத படிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். அவர்: எவைகள் என்றார். 9அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டி ரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பிபிருந்தோம் இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப் போய், அவருடைய சரீரத்தைக் காணாமல் திரும்பி வந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவ தூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி எங்களைப் பிரமிக்கப் பண்ணினார்கள். அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய் ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். 10அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும். தமது மகிமையில பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள் அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று என்று அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார் அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசிர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்து போனார் அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேத வாக்கியங்களை நமக்கு விளங்கக் காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு: அந்நேரமே எழுந்திருந்து எருசலேமுக்குத் திரும்பிப் போய் பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக் கண்டு: கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்து கொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள், லூக். 24:12-35 11இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம். அருமையும் கிருபையுமுள்ள பிதாவே, உம்முடைய வார்த்தைக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஏனெனில் உம்முடைய வசனமே சத்தியம், உம்முடைய வசனமே ஜீவன். ஓஆண்டவரே, நீரும் உம்முடைய வார்த்தையும் ஒன்றே. இன்றிரவு ஆண்டவரே, நீர் உமது உயிர்த்தெழுதலின் வல்லமையுடன் எங்கள் மத்தியில் வந்து, எம்மாவூர் சீஷர்களுக்குஉம்மை வெளிப்படுத்தினது போல் இன்றிரவு எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தி, நாங்களும் கூட ''நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?“ என்று சொல்லிக் கொண்டு வீடு திரும்பச் செய்யும். ஆண்டவரே, அதை அருள்வீராக! இது மீண்டும் சாயங்கால நேரமாயுள்ளது, இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 12இப்பொழுது நான் வேதாகமத்தைக் குறித்து பேச விரும்புகிறேன். இன்றிரவு நான் தெரிந்து கொண்ட பொருள், ''தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள்'' என்பதே. தீர்க்கதரிசனத்தால் சம்பவங்கள் தெளிவாக்கப்படுகின்றன. வேதாகமம் என்பது மற்றெல்லா புனிதப் புஸ்தகங்களைக் காட்டிலும் வித்தியாசமான ஒரு புஸ்தகமாகும். வேதாகமம் ஒரு வித்தியாசமான புஸ்தகம். அது வரப்போகும் சம்பவங்களை முன் கூட்டி அறிவிக்கும் ஒரு தீர்க்கதரிசன புஸ்தகமாகும். அல்லாமலும், அது இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகின்றது. ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடியவுள்ள புஸ்தகங்கள் அனைத்தும், அவர் யாராயிருந்தார், யாராயிருக்கின்றார் என்றறிவித்து, அவரை முழுமையாக வெளிப்படுத்தித் தருகின்றன. முழு புஸ்தகமே, இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தும் புஸ்தகம் என்று வெளி 1:1-3 உரைக்கின்றது, அது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துதல். 13மற்ற புனித புத்தகங்கள் அனைத்துமே புனித நூல்களாகவும், ஒழுக்கத்தை, நீதிகளை, தத்துவத்தை விளக்குவனவாகவே உள்ளன. உங்களில் எத்தனை பேர் முகம்மதியரின் வேதமாகிய குரானையும், புத்தரைக் குறித்த நூல்களைப் போன்றவைகளை படித்திருக்கிறீர்கள்? இவையனைத்தும் மக்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்றும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்னும் வழிமுறைகளைக் கூறுபவையே. அவை தீர்க்கதரிசனம் உரைப்பதில்லை, அல்லது பிறருக்கு அளிக்கப்பட்ட வரங்களைக் குறித்து கூறுவதில்லை. ஒரு விடுதியைச் சேர்ந்து கொள்வது போன்றுள்ளது அது. ஆகவே சபைகள் விடுதியைச் சேர்ந்து கொள்வது போன்ற ஓர் நிலைக்கு வரும் போது, அவை தேவனுடைய வார்த்தையை விட்டு அகன்று சென்றுவிடுகின்றன. 14வேதாகமம் என்பது ஜீவனுள்ளதாயும், இயேசு கிறிஸ்துவைக் குறித்து முன்னுரைத்து சாட்சி பகருகின்றதாகவும் இருக்கின்றது. பூமி எப்படி வளர்ந்து முழு வளர்ச்சி அடைந்துள்ளதோ, திராட்சை செடி எப்படி வளர்ந்து முழு வளர்ச்சி அடைகின்றதோ, நாளானது எவ்வாறு வளர்ந்து முழு வளர்ச்சியைப் பெறுகின்றதோ, அது போன்று வேதாகமும் இயேசு கிறிஸ்து என்னும் நபரின் முழு வளர்ச்சியை எடுத்துக் காண்பிக்கின்றது. அவரே வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாக, மீட்பின் முழு புத்தகமாகத் திகழ்கிறார். வேதாகமம் தேவனுடைய வார்த்தையாக இருந்து கொண்டு, வரப்போகும் சம்பவங்களை முன்னறிவிக்கின்றது. விசுவாசிகள் அதைப் படித்து, அதன் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டுமென்றும், அதன் ஒரு பாகத்தை மாத்திரம் விசுவாசிக்கக் கூடாதென்றும், அதன் ஆக்கியோனிடமிருந்து கட்டளை பெற்றுள்ளனர். ஒரு வார்த்தையை நீங்கள் அவிசுவாசிக்க நேரிட்டாலும், அதை முழுவதும் விசுவாசிக்கும் வரை நீங்கள் முயல வேண்டும். அதன் ஒவ்வொரு வார்த்தையும் சர்வ வல்லமையுள்ள தேவனின் ஒரு பாகமாக அமைந்துள்ளது. தேவன் வெளிப்பட்டு அவர் யாரென்பதைக் காண்பிக்க தமது வார்த்தைக்குள் சுற்றப்பட்டுள்ளார். விசுவாசிகள் என்னும் நிலையில் நாம் அதன் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்க வேண்டுமெனும் கட்டளையைப் பெற்றிருக்கிறோம். அதனை எழுதிய ஆக்கியோன் தேவனே. அதனுடன் யாரும் யாதொன்றைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ கூடாது. அப்படி செய்தால் அது இயற்கைக்கு முரண்பட்ட (freak) தேவனுடைய சரீரமாகிவிடும். அதனுடன் ஏதாவதொன்றை கூட்டினால், அது ஒரு கையில் ஆறு விரல்கள் கொண்டதாகவோ, அல்லது மூன்று கைகள் கொண்டதாகவோ அமைந்துவிடும். அதனின்று ஏதாவதொன்றை எடுத்துப்போட்டால், அது ஒரு கை குறைந்ததாகவோ அல்லது ஒரு விரல் குறைந்ததாகவோ அமைந்து விடும். அது இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின் முழுமையாக அமைந்துள்ளது, கிறிஸ்து ஆணாக, மணவாளனாக இருப்பதால், மணவாட்டியும் அவருக்குள் வெளிப்பட்டுவிடுகிறாள். இவர்களிருவரும் ஒன்றாயிருக்கின்றனர். ''நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' (யோவான் 14:20). எனனே முழுமையான ஒரு காட்சி! அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும் உண்மையான விசுவாசிகள் அதை அவ்வாறே ஏற்றுக் கொண்டு விசுவாசித்து, தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றும் இக்காலத்தில் நிறைவேற பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு விசுவாசியும் அதற்கென விழித்திருந்து காத்திருக்கிறான். அவ்விதம் கால் விரல்களில் நின்றுகொண்டு கவனித்துக் கொண்டுவரும் ஒவ்வொரு விசுவாசிக்கும் அது வெளிப்படுத்தப்படுகின்றது. 15கர்த்தராகிய இயேசு இவ்வுலகில் இருந்த அந்த நாட்களை சற்று பாருங்கள். ஏசாயாவின் மூலம் வேதம் தெளிவாக, “கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள் என்று வனாந்தரத்திலிருந்து கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாயிருக்கும்'' என்று கூறியிருக்க, அக்காலத்து ஜனங்கள் யோவான் ஸ்நானனை ஏன் அடையாளம் கண்டுகொள்ளவில்லை? அவர்கள் தங்கள் கடைசி தீர்க்கதரிசியை பெற்றிருந்தனர். அது தான் மல்கியா 3. ”இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்“ என்று அது உரைத்தது. அவர்கள் ஏன் அதைக் காணவில்லை? ஏனெனில் அவர்கள் ஏற்கனவே நடந்து போன ஒன்றை நோக்கினவர்களாய், இதற்கு முன்பு புறப்பட்டுச் சென்ற ஒரு செய்தியை ஆதாரமாகக் கொண்ட கருத்துக்களையுடையவர்களாய், அவர்கள் வாழ்ந்து வந்த காலத்தில் தேவன் வெளிப்பட்டதை காணத் தவறினர். எல்லாவிடங்களிலுமுள்ள கிறிஸ்தவர்களே, இன்றிரவு உலகம் அந்நிலையில்தான் உள்ளது. எவ்வித சந்தேகமுமின்றி, அதுதான் உண்மை. இன்றைய கிறிஸ்தவர்கள் லூத்தர் எழுதிய நெறிமுறைகளை நோக்கிப் பார்த்தவர்களாய், வெஸ்லி, சாங்கி, பின்னி, நாக்ஸ், கால்வின் போன்றவர்கள் கூறியவைகளை நோக்கியிருக்கின்றனர். அவைகளைக் குறித்து தீமையானதொன்றையும் நாம் கூறமுடியாது. அவையாவும் கடந்த காலத்துக்குரியவை. 16அது போன்று பரிசேயர்களும் பின்நோக்கிப் பார்த்து மோசே செய்ததை கண்டார்கள். ''எங்களுக்கு மோசே இருக்கின்றான். நீ எங்கிருந்து வந்தாயென்று எங்களுக்குத் தெரியாது“ என்று அவர்கள் இயேசுவிடம் கூறினர். ஆனால் மோசே இவ்வுலகில் இருந்தபோது, அவன் எங்கிருந்து வந்தானென்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. பார்த்தீர்களா? இயேசு, ''நீங்கள் தீர்க்கதரிசிகளுடைய கல்லறைகளை சிங்காரிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் தான் அவர்களை அதற்குள்ளே வைத்தீர்கள்“ என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. அவர்களுடைய செய்திகள் புறப்பட்டுச் சென்ற பின்பு ஒரு செய்தி புறப்பட்டுச் செல்கிறது. ஜனங்கள் அதைக் கேட்டு ஏளனம் செய்கின்றனர் (உலகம் ஏளனம் செய்கிறது). செய்தியையளித்த செய்தியாளனும் அந்த செய்தியும் முடிந்த பின்பு, அந்த செய்தியின் மேல் அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை கட்டிக் கொள்கின்றனர். அவர்கள் அங்கேயே மரித்துவிடுகின்றனர். அவர்கள் மறுபடியுமாக ஜீவனைப் பெறுவதில்லை. 17சற்று உற்று பாருங்கள். இங்குள்ள ஜனங்களிடம், முக்கியமாக ரோமன் கத்தோலிக்க மக்களிடம், இதை கேட்கிறேன், நீங்கள் எப்பொழுதாவது ரோமன் கத்தோலிக்க சபையின் சரித்திரத்தை படித்திருக்கிறீர்களா? ஹிப்போவைச் சேர்ந்த பரி. அகஸ்டின் காலம் முதற்கு எத்தனை குற்றமற்ற ஜனங்களை சபை கொன்றுப் போட்டுள்ளது என்பதை இரத்த சாட்சிகளின் பட்டியலில் பாருங்கள், அதன் சரியான எண்ணிக்கை எனக்கு ஞாபகம் வரவில்லை. ஆனால் அது கோடிக்கணக்காகும். ரோமன் கத்தோலிக்க சபையை எதிர்க்கும் எவரும் கொல்லப்பட வேண்டுமென்று தேவனுடைய சித்தமாயுள்ளது என்று ஆப்பிரிக்காவிலுள்ள ஹிப்போவை சேர்ந்த பரி. அகஸ்டின் ஒரு பிரகடனம் விடுத்தார். பரி. பாட்ரிக் என்பவர், அவருடைய மரணம் வரைக்கும் ரோமன் கத்தோலிக்கராக அங்கீகரிக்கப்படவில்லையென்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் போப்பாண்டவரையும் அவருடைய செயல்களையும் எதிர்த்தார், ரோமன் கத்தோலிக்க சபை, அவரைச் சார்ந்தவர்களில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று போட்டது, அந்த பரிசுத்தவாட்டி ஜோன் ஆஃப் ஆர்க் என்பவளை ரோமன் கத்தோலிக்க சபை மந்திரவாதி என்று குற்றஞ்சாட்டி தொழுமரத்தில் எரித்து போட்டது, என்று உங்களுக்கு தெரியுமா? இருநூறு ஆண்டுகள் கழித்து அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து, கொடூரமான குருமார்களின் சடலங்களை தோண்டியடுத்து, அவை புனிதமான நிலத்தில் புதைக்கப்படலாகாது என்று கருதினவர்களாய், தங்கள் செயல்களுக்கு பிராயச்சித்தமாக அவைகளை கடலில் எறிந்தனர். அந்த நாள் உங்களைக் கடந்துசென்று, நீங்கள் மூடராயிருக்க அனுமதிக்க வேண்டாம். 18அன்று இயேசுவை குற்றஞ்சாட்டின ஆசாரியர்கள் இன்றிரவு இங்கு வர எவ்வளவு ஆவலாய் இருப்பார்கள்! அவர்களுடைய காலத்துக்குரிய தீர்க்கதரிசனத்தை அவர்கள் அறியாமலிருந்ததே அவர்கள் செய்த ஒரே தவறாகும். “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. நான் யாரென்று வேத வாக்கியங்கள் சாட்சி பகருகின்றனவே'' என்று இயேசு கூறினார்... அந்த காலத்தில் அவர் யாரென்று. கவனியுங்கள், வேதாகமம் ஒருபோதும் தவறுவதில்லை. அது தேவனுடைய வார்த்தை விழுந்துபோகிற ஒன்றை மாத்திரம் செய்யமுடியாது. ஏனெனில் அதன் ஆக்கியோனின் செயல்களை, அவர் அதை செய்யும் முன்பே, அது முன்னறிவிக்கிறது. 19ஒரு மனிதன் ஏதாவதொன்றை முன்னறிவித்தால் அது நிறைவேறும் என்பது ஆயிரத்தில் ஒரு தருணம் மாத்திரமே வாய்ப்புண்டு. அது எங்கு நிகழுமென்று அவன் குறிப்பாக முன்னறிவித்தால், அது பத்தாயிரத்துக்கு ஒரு முறையே நிறைவேற வாய்ப்புண்டு. அது எந்த நாளில் நிகழும் என்றும் அவன் முன்னறிவித்தால், அது நிறைவேறுவதன் வாய்ப்பு பத்து லட்சத்தில் ஒன்றாக குறைந்து விடுகிறது. அவன் மேலும் அது யாருக்கு நிகழும் என்று முன்னறிவித்தால், அந்த வாய்ப்பு கோடிக் கணக்கில் ஒன்றாக ஆகிவிடுகின்றது. ஆனால் வேதாகமமோ அது யாருக்கு, எங்கே, எப்பொழுது நேரிடுமென்றும், நாம் எதை எதிர்நோக்க வேண்டுமென்றும் பிழையின்றி முன்னறிவித்துள்ளது. அது முன்னறிவித்தது ஒரு முறைகூட தவறியதில்லை. அண்மையில் புனித இருதய ஆலயத்தின் குருவானவரோடு நான் உரையாட நேர்ந்தது. அவர், “திரு. பிரான்ஹாம் அவர்களே, வேதாகமத்தைக் குறித்து நீங்கள் தர்க்கிக்க முயல்கின்றீர்கள். அது வெறும் சபை சரித்திரம் மாத்திரமே என்றார். நான், ''அது சரித்திரமல்ல. அது அச்சடிக்கப்பட்ட எழுத்து வடிவிலுள்ள தேவன்'' என்றேன். அவரோ, ''தேவன் சபையில் இருக்கின்றார்'' என்றார். நான், ''தேவன் வார்த்தையிலிருக்கிறார். அதற்கு முரணான எதுவும் பொய்யே. ஏனெனில், என்னுடைய வார்த்தையே சத்தியம்; எந்த மனிதனுடைய வார்த்தையும் பொய்'' என்று அவர் கூறியுள்ளாரே“ என்றேன். அவரோ, “நாம் அதைக் குறித்து விவாதிக்கக் கூடாது,'' என்றார். நான், “உம்மை விவாதிக்க நான் அழைக்கவில்லையே! வேதம், 'வழக்காடுவோம் வாருங்கள்' என்று கூறுகிறதல்லவா?'' என்றேன். ஆம். 20அது ஆக்கியோனின் செயல்களை அவர் புரியும் முன்பே, முன்னறிவிக்கிறது. எனவே எவ்வித சாக்குபோக்குமின்றி அது ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் நியாயத்தீர்ப்பிலே நிறுத்துகின்றது. நீங்கள் மெதோடிஸ்டுகள் அல்லது பாப்டிஸ்டுகள் அல்லது ரோமன் கத்தோலிக்கர் அல்லது பெந்தேகோஸ்தேயினர் கூறுவதை ஏற்றுக் கொள்ள நேரிட்டால், நியாயத்தீர்ப்பில் நீங்கள் ஏமாற்றமடைய வகையுண்டு. ஆனால், என்ன நிகழப்போகிறது என்று வேதம் கூறுவதை நீங்கள் கவனித்து வருவீர்களானால், அது நிறைவேறும் போது, என்ன நிகழ்கிறது என்பதை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள். ஆனால் எல்லோரும் காணத்தக்க வண்ணம் அது வெளிப்படையாய் வேதத்தில் இல்லை. இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, கற்று கொள்ளக் கூடிய பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் இயேசு தேவனை ஸ்தோத்தரிக்கிறார். (மத் 11:25). சர்வ வல்லமையுள்ள தேவன் தமது சொந்த வார்த்தையின் மேல் அமர்ந்தவராய், ஜசுவரியவான்களின் கண்களையும், அதிகம் படித்த ஞானிகளின் கண்களையும், அவர்கள் அவரைக் காணாதவாறு குருடாக்கும் வல்லமை பெற்றவராய், அதே சமயத்தில் எளியவரின் கண்களையும், படிப்பற்றவரின் கண்களையும் திறக்கும் செயலை சற்று யோசித்துப் பாருங்கள். 21எம்மாவூர் சீஷரைக் கவனியுங்கள். அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. நாள் முழுவதும் அவர்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். எனினும் அவர் யாரென்பதை அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனால் அப்படி செய்ய முடியும். ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார். அதையே அவர் ஆசாரியர்களுக்கும் வேத பாரகருக்கும் செய்தார். ஏனெனில் அவர் அவ்விதம் செய்ய வேண்டுமென்று எழுதப்பட்டிருந்தது. நமக்கு தருணம் கிடைப்பதற்கென அவர்களுடைய கண்களை தேவன் குருடாக்கினார். கவனியுங்கள், அவர்கள் அதிகம் படித்த ஞானிகளாகவும், ஆசாரியர்களாகவும் இருந்த போதிலும். அவர்கள் என்ன செய்த போதிலும், அவர்களால் காண முடியவில்லை. ஏனெனில் அவர்கள் குருடராயிருந்தனர். அவர்களுடைய மாமிசப்பிரகாரமான கண் பார்வை சரியாக இருந்திருக்கலாம். ஆனால் ஆவிக்குரிய பார்வையோ! 22இன்று காலையில், ஒழுக்கங்கெட்ட விதத்தில் ஆடைகளை அணிவதன் காரணமாக விபச்சாரிகளாக கருதப்படும் பெண்களைக் குறித்து நான் பேசினேன். அவர்கள் விபச்சாரிகள். ஒவ்வொரு முறையும் அவர்கள் பாலுணர்ச்சியை தூண்டும் ஆடைகளை அணியும்போது தேவனுடைய புஸ்தகத்தின் பிரகாரம் அவர்கள் விபச்சாரம் செய்தவர்களாக குற்றஞ்சாட்டப்படுகின்றனர். அவர்களுடைய ஆத்துமா கறைபடுகிறதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் களங்கமற்றவர்கள். உண்மையில் அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட விரும்ப மாட்டார்கள். ஆனால் பாவம். அந்த பெண்கள் செய்வது தவறென்றும் அது விபச்சாரம் செய்வதற்கு சமமென்றும் உண்மையை எடுத்துக் கூற அவர்களுக்கு யாருமேயில்லை. அப்படி எடுத்துக் கூறாதவர்கள் வேசி ஸ்தாபனத்தவர். வேதம் அவர்களைக் குறித்து இவ்வாறு கூறுகின்றது: ''திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகாவேசி. அவளோடே பூமியின் ராஜாக்கள், பூமியின் குடிகள், சபைகள் போன்றவை ஆவிக்குரிய வேசித்தனம் பண்ணினார்கள். அவள் ஸ்தாபனங்களாகிய வேசிகளுக்குத் தாய்''. 23நாம் வேதத்தைக் கவனித்து வருகிறவர்களாயிருக்கிறோம். தேவன் நம்மை அந்தகாரத்தில் விட்டுவிடவில்லை, சம்பவங்கள் நிகழும் முன்பே, அதன் தன்மை என்னவென்றும், அது நிறைவேறும் காலம் என்னவென்றும் முன்னறிவிக்கும் வேதாகமத்தை அவர் நமக்கு அனுப்பி தந்திருக்கிறார். இன்றைக்கு என்ன தேதி என்று அறிந்து கொள்ள நாம் நாள் காட்டியை (calendar) காண்பது போன்றது அது. இன்று சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக் கிழமையா என்று அறிந்து கொள்ள நாம் நாள் காட்டியைப் பார்க்கிறோமல்லவா, இது என்ன நாளென்று நாள் காட்டி நமக்கு அறிவிக்கும். ஜனங்கள் ஆலயங்களுக்குச் செல்வதையும் ஆலய மணி அடிப்பதையும் நாம் காணும் போது, அது என்ன நாளென்று வியந்து நாட்காட்டியைப் பார்க்கும் போது, அது என்ன நாளென்பதை அது தெரிவிக்கும். 24இன்று சபையானது சோதோமின் நாட்களிலிருந்தது போல் உலகப் பிரகாரமாக சென்று, சபை உலகம் இப்பொல்லாத காலத்தின் தேவனை வழிபட சென்று கொண்டிருப்பதையும் அதே சமயத்தில் சிறுபான்மையினோரைக் கொண்ட கூட்டமொன்று தேவனுடைய ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் ஜீவனை மறுபடியுமாக தோன்றச் செய்து, நிறைவேறுமென்று வேத வாக்கியங்கள் கூறியவை நிறைவேறுவதை நாம் காணும் போது, நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்கிறோம். நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து வருகிறோமென்று வேதம் தீர்க்கதரிசனமாக முன்னறிவித்துள்ளது. நாம் வாழும் நேரம் என்னவென்றும், என்னென்ன சம்பவங்கள் நிகழும் என்பதைக் குறித்தெல்லாம் அது ஒரு எழுத்தும் கூட பிசகாமல், பிழையின்றி முன்னறிவித்துள்ளது. ஒவ்வொரு காலத்தைக் குறித்தும் அது முன்னுரைத்தவை ஒருபோதும் தவறியதில்லை. அது ஒருபோதும் தவறாது. அதைக் காண முன்குறித்திருப்பவர்கள் அதைக் காண்பார்கள். ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான், என் பிதா எனக்குக் கொடுத்தவை யாவும் என்னிடத்தில் வரும் என்று இயேசு கூறியுள்ளார். வார்த்தை வார்த்தையோடு இணைகின்றது. அது வேறொன்றும் செய்ய முடியாது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாளை நாம் அறிந்தவர்களாயிருக்கிறோம். 25ஆனால் ஒவ்வொரு காலத்திலும் நிகழ்ந்தது போல், மனிதன் தன் சொந்த விளக்கங்களை தேவனுடைய வார்த்தைக்குக் கொடுக்க ஜனங்கள் அனுமதித்ததனால், நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளைக் காணக் கூடாதவாறு அவை அவர்கள் கண்களை குருடாக்கிப் போட்டன. பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் அது அதையே செய்தது. பவுலும் கூட அங்கு நின்று கொண்டு வேத வாக்கியங்களை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தபோது, அவன் பிரதான ஆசாரியனை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்று அழைத்ததனால், ஒரு மனிதன் அவன் கன்னத்தில் அடித்தான். அவர்கள், தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்ட வார்த்தையை தேவன் உறுதிப்படுத்துவதைக் காணத் தவறினர். 26பாருங்கள், வேதம் தன்னையே முரண்படுத்திக் கொள்வதில்லை. வேதம் தேவனாகும். அது போன்று தேவனிலும் எவ்விதமுரணான காரியங்களும் இல்லை. அவர் பரிபூரணமானவர். ஆனால் ஜனங்களோ தங்கள் சொந்த விளக்கங்களுடன் இப்பொழுது கவனியுங்கள். நண்பர்களே, இதை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். சபைகள், தாங்கள் அளித்துள்ள விளக்கங்களில், ஒருவருக்கொருவர் ஒத்துப் போவதில்லை, மெதோடிஸ்டுகள் பாப்டிஸ்டுகளுடனும், பாப்டிஸ்டுகள் பிரஸ்பிடேரியன்களுடனும், பிரஸ்பிடேரியன்கள் பெந்தெகொஸ்தேயினருடனும் ஒத்துப் போவதில்லை. பெந்தெகொஸ்தேயினரிடையே மாத்திரம் நாற்பது வெவ்வேறு ஸ்தாபனங்கள் உள்ள காரணத்தால், அவர்களும் ஒருவரோடொருவர் ஒத்துப்போவதில்லை. எனவே, அது பாபிலோனாக குழப்பமாக அமைந்துள்ளது என்று நீங்கள் காணலாம். ஆனால் தேவனோ தமது வார்த்தைக்கு தமது சொந்த விளக்கங்களை அளிக்கிறார். அவர் ஒன்றை வாக்குத்தத்தம் செய்திருப்பாரானால், அதை அவரே செய்து முடிக்கிறார். அந்த நேரத்தில் அவர் தம்மை வெளிப்படுத்துவதன் மூலம், அவரே அதற்கு விளக்கத்தை அளிக்கிறார். கிறிஸ்துவின் சரீரம் பாதங்களிலிருந்து தலை வரைக்கும் எவ்வளவாக முன்னேறியுள்ளது! 27ஜனங்கள் வேதத்தைப் படிப்பதற்கு பதிலாக மற்றவர் அதைக் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதற்கு செவி சாய்ப்பதன் காரணத்தால், அதைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகின்றனர். இயேசு அவர்களிடம் வேதத்தைப் படிக்கக் கூறினார். அவர், ''அவைகள் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்றார் (யோவான் 5:3). வேறு விதமாகக் கூறினால், “வேத வாக்கியங்களைப் படித்து, மேசியா என்ன செய்வாரென்றும், அவர் எந்த நேரத்தில் வரவிருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். யார் மேசியாவுக்கு முன்னோடியாக இருப்பார் என்றும் அறிந்து கொள்ளுங்கள். அந்த மணி நேரத்தைப் பாருங்கள். வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய ஒரு சத்தம் உண்டாயிருக்கும் (யோவான் ஸ்நானன்) நீங்கள் நினைத்தபடியே அவனுக்குச் செய்தீர்கள். நான் வரும்போது என்ன செய்வேனென்று எழுதியிருப்பதைப் பாருங்கள். ஆனால் நீங்களோ என்ன செய்தீர்கள்? அவைகளை தீர்க்கதரிசிகள் கூறினவைகளை நான் நிறைவேற்றத் தவறினேனா?” என்று இயேசு கேட்டார். 28இப்படியாக இந்த மாலை வேளையிலே வேதவாக்கியங்களை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்துக் கொண்டே வருவோமானால், அவரைக் குறித்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டவை அவ்வாறே பிழையின்றி நிறைவேறினதைக் காணலாம். இந்த சம்பவத்தை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களோ, “இந்த மதவெறி கொண்ட வாலிபன், ஏறக்குறைய முப்பது அல்லது முப்பத்து மூன்று வயதுடையவன். எல்லாவிதமான ஒளியைப் பெற்றுள்ளதாகவும், புறா அவன் மேல் இறங்கினதாகவும். அவன் உரிமை பாராட்டுகிறான். என்னே ஒரு அவமானம்! அவன் முறை தவறி பிறந்து விட்டு, ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்ததாக கூறிக் கொள்கிறான்” என்றெல்லாம் கூறினர். ''நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்'' என்றும் (ஏசா. 9:6), “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' (ஏசா. 7:14) என்றும் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்ததை அவர்கள் அறிந்திருக்க வேண்டாமா? அவர்கள் இவைகளை அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் செய்தது என்னவென்றால், இவை எதிர் காலத்தில் நடக்க வேண்டிய சம்பவம் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். இந்த மனிதன் இயேசுவுக்கு, இந்த தீர்க்கதரிசனங்கள் பொருந்தவில்லை என்று அவர்கள் எண்ணினர். ஆனால் இயேசுவோ அவர்களிடம், ”வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னுடைய செய்திக்கு சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்றார். ஒரு வேத பண்டிதன் என்ன கூறினான் என்றல்ல, ஆனால் தேவன் (அவருடைய சொந்த வார்த்தை) என்ன நிகழும் என்று கூறியுள்ளதே முக்கியம் வாய்ந்தது. ஆமென்! இன்றைக்கும் இவ்வாறே உள்ளது, வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். நாம் வாழும் நேரத்தை அவை காண்பிக்கின்றன; இந்நாளில் என்ன நடக்குமென்று அவை பிழையின்றி நமக்கு எடுத்துரைக்கின்றன. நீங்கள் சார்ந்திருக்க வேண்டியவை அவைகளே. இயேசு கிறிஸ்து என்னும் நபரைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே, “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று வேதம் உரைக்கின்றது. அவரே இக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயிருக்கிறார். அது வித்தியாசமாயிராது. 29அவர்கள் மனிதருடைய வியாக்கியானத்திற்கு செவி கொடுக்கின்றனர். அதன் விளைவாக, தேவனுடைய வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டு நிறைவேறுவதை அவர்கள் கண்ட போதிலும், அவர்கள் புரிந்து கொள்ள தவறி விடுகின்றனர். ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே நிகழ்ந்து வருகின்றது. அவர்கள் மனித வியாக்கியானத்திற்கு செவி கொடுப்பதனால் இயேசு, “அவர்கள் குருடருக்கு வழிகாட்டும் குருடர்கள்'' என்றார். ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழி காட்டினால் என்ன நேரிடும்? இந்த மத சம்பந்தமான லவோதிக்கேயா சபையின் காலம் குருடாயிருக்கும் என்று வேதம் முன்னறிவித்துள்ளது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்கள் அவரை சபைக்குப் புறம்பாக்கினார்கள். இவ்வாறு இயேசு சபைக்குப் புறம்பாயிருந்த சபை காலம் வேறொன்றில்லை. ஆனால் லவோதிக்கேயா சபையின் காலத்திலோ அவர் வெளியில் நின்று கொண்டு, உள்ளே வர முயன்று கொண்டிருக்கிறார்: ”இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்'' (வெளி 3:20). அவர் உள்ளே இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரோ, ''நீ ஐசுவரியவானென்றும், திரவிய சம்பனென்றும், எனக்கு ஒரு குறையுமில்லையென்றும் சொல்லிக் கொள்கிறாய். ஆனால் நீ குருடாயிருந்து குருடருக்கு வழி காட்டுவதை அறியாமலிருக்கிறாய். நீ ஆவியில் தரித்திரனும், நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்பட்டவனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல் இருக்கிறாய்'' என்றார். ஒரு மனிதன் நிர்வாணியாய் தெருவில் நடந்து திரிவானானால், அவனிடம் அதைக் குறித்து நீ கூறும்போது அவனுக்கு புத்தி இருந்தால் அவன் அதை சரிபடுத்த முயல்வான். ஆனால் அவனோ தலையசைத்து. ''நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன். நீ யார் எனக்கு சொல்வது. நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும்'' என்பானானால், அது பரிதாபமுள்ள ஒரு செயலேயன்றி வேறென்ன? இந்த பொல்லாத காலத்தில், நாம் வாழும் இக் கடைசி காலத்தில் - சபை அந்நிலையில்தான் இருக்கும் என்று வேதாகமத்தில் தேவன் அறிவித்துள்ளார். ஆனால் ஜனங்களைப் பார்த்து தேவன், “நான் நேசிக்கிறவர்களெவர்களோ, அவர்களை கடிந்து கொள்கிறேன்'' என்கிறார் (வெளி 3:19). உங்களுடைய கிரியைகளைக் குறித்து தேவனால் நீங்கள் கடிந்து கொள்ளப்பட்டால், அதை விட்டு வெளியே வாருங்கள். அதனின்று விலகுங்கள். ''நான் நேசிக்கிறவர்களெவர்களோ, அவர்களைக் கடிந்து கொள்கிறேன்.'' 30அக்காலத்து பரிசேயர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? “சற்று பொறு. இந்த மனிதன் நமக்கு சவால் விட்டிருக்கிறார்”. “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” என்று அவர் கூறினாரல்லவா? எனவே நான் வேத வாக்கியங்களுக்குத் திரும்பி சென்று, “அவர் யாரென்றும், அவர் என்ன செய்வாரென்றும், என்ன நேரிடுமென்றும் கண்டறிவேன்'' என்று கூறியிருக்கவேண்டும். அதற்கு பதிலாக அவர்கள் ஆசாரியனிடம் சென்று, ''இவரைக் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்னவென்று கேட்டனர்”. வித்தியாசத்தை கவனித்தீர்களா? அவர்கள் தேவனுடைய வார்த்தையை படித்திருக்க வேண்டும். 31எபிரேயர் 1:1-ல் வேதம், “பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும், வகைவகையாகவும் தீர்க்கதரிசிகளின் மூலமாய் வேதாகமத்தை எழுதின தேவன்'' என்றுரைக்கிறது. கவனியுங்கள். தாம் தெரிந்து கொண்ட முறையின்படியே அவர் வேதத்தை எழுதினார். பாருங்கள்? அவருக்கு அவ்விதம் வேதத்தை எழுதவேண்டிய அவசியமில்லை; மனிதனை இரத்தத்தினால் இரட்சிக்க வேண்டிய அவசியம் அவருக்கிருந்தது. மனிதனின் மூலம் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டுமென்னும் அவசியம் அவருக்கில்லை. அவர் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கலாம். காற்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவர் செய்திருக்கலாம். ஆனால் அவரோ இதற்கென மனிதனை தெரிந்து கொண்டார், அவருடைய வார்த்தை வருவதற்கு அவர் ஒரு வழியை கடைபிடித்தார். அவரால் முன் குறிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளின் மூலம் அது வர வேண்டுமென்று அவர் சித்தம் கொண்டார். அவர்கள் தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகமாக அமைந்திருந்து, அவர்கள் காலத்துக்குரிய தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்தி அதை பிரகடனம் செய்தனர் ”தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வந்தது. அது வேத பண்டிதனிடம் ஒருபோதும் வருவதில்லை. அதற்கு ஆதாரமாக ஒரு வேதவாக்கியத்தையாவது காண்பியுங்கள். அது தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வருகிறது. தேவன் பொய்யுரையாதவர். எனவே, தேவன் தாம் தெரிந்து கொண்ட முறையின்படியே, தம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட தீர்க்கதரிசிகளின் மூலமாய் வேதாகமத்தை எழுதினார். மனிதரால் தெரிந்து கொள்ளப்பட்ட தீர்க்கதரிசிகளின் மூலமாயல்ல, ஆனால் தேவனே தெரிந்து கொண்ட தீர்க்கதரிசிகளின் மூலமாய். 32அதன் பின்பு விசுவாசிகள், தங்கள் தீர்க்கதரிசிகள் கூறினது நிறைவேறுவதற்காக கவனித்துக் கொண்டே வருகின்றனர். அதன் நிறைவேறுதல், அவர்கள் தேவனுடைய தீர்க்கதரிசிகள் என்பதை அடையாளம் காட்டுகிறது. ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஆவியால் ஊக்குவிக்கப்பட்டவர்களாய், அந்த நேரத்துக்குரிய வார்த்தையை சரியாய் எடுத்துக் கூறுகின்றனர். அதுவே அவர்களுடைய நற்சாட்சிப் பத்திரமாகும். பாருங்கள். அதைக் குறித்து நாம் கடந்த ஞாயிறன்று பார்த்தோம். அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள். அதற்கு உதாரணமாக நாம் பிலேயாமையும் மோசேயையும் எடுத்துக் கொண்டோம். இருவரும் ஒரே ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவன், “நாம் எல்லோரும் ஒன்றே. நாமனைவரும் ஒன்று கூடுவோம். எங்களிடம் அழகான பெண்கள் இருக்கின்றனர். உங்கள் வாலிபர் இங்கு வந்து அழகான மனைவிகளை தெரிந்து கொள்ளட்டும். அதெல்லாம் சரிதான். நாமெல்லோரும் ஒரே இனத்தவரே” என்றான் அவர்கள் அதற்கு செவி கொடுத்தனர். தேவன் அவர்களை அதற்காக மன்னிக்கவேயில்லை. இன்று உலக மக்கள் ஒரு வடிகாலை (outlet). அல்லது சிறு குறுக்கு வழிகளை நோக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு குறுக்கு வழி ஏதுமில்லை. அது ஒரே அமைப்புடன் பொருந்துவதற்கேன, நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமேயன்றி. உங்களுடன் பொருந்துவதற்கென அந்த அமைப்பை நீங்கள் மாற்றக் கூடாது! எல்லோரும் அப்படியே செய்ய வேண்டும். நாம் செய்வதற்கு தேவன் அந்த ஒரே வழியை வகுத்துள்ளார். 33இப்பொழுது கவனியுங்கள். தேவனுடைய வார்த்தை உறுதிப்படுவதற்காக விசுவாசிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது மனிதனால் எழுதப்பட்டதல்ல, தேவனாகிய கர்த்தரால் எழுதப்பட்டது. எனவே அது மனிதனுடைய புத்தகமல்ல. ''இது பழைய எபிரேயரின் நூல்'' என்று ஒருவர் கூறினார். தங்களையே குற்றப்படுத்தும் ஒரு கடிதத்தை எபிரேயர்கள் எழுதுவார்களா என்ன? சுயபோக்கும், நயமான சுபாவமுடைய அந்த யூத நாட்டவர், தங்களுடைய அக்கிரமங்களை எழுதி வைத்து தங்களையே குற்றப்படுத்திக் கொள்வார்களா என்ன? அல்லவே அல்ல. அவர்கள் எவ்வாறு தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக விக்கிரகராதனையில் ஈடுபட்டனர் என்றும், விபச்சாரம் செய்தனர் என்றும் தாங்கள் செய்த பாவங்களையே கூறிக் கொள்வார்களா என்ன? இல்லை, இல்லை. பெருமை பாராட்டும் அந்த நாட்டவர் ஒருக்காலும் அப்படிக் கூறமாட்டார்கள். அது மனிதனுடைய புஸ்தகமல்ல, அது தேவனுடைய புஸ்தகம். தரிசனங்கள் கண்ட மனிதரும், தேவனுடைய சத்தத்தைக் கேட்ட மனிதரும், அது எதைக் குறிக்கிறது என்பதை அநேகமுறை அவர்களால் அறிந்து கொள்ள முடியாமற் போயிற்று. பாருங்கள்? மனிதன் வேதாகமத்தை எழுதவில்லை. தேவனே வேதாகமத்தை எழுதினார். அது மனிதனுடைய புஸ்தகமல்ல, அது தேவனுடைய புஸ்தகம். அது மனிதனின் உதடுகளின் மூலம் பேசப்பட்ட தேவனுடைய சிந்தையாகும். அதுதான் வேதாகமமாக ஆனது. சிந்தை பேசப்படுவதே வார்த்தையாகிறது. ஆதியிலே தேவனுடைய சிந்தை இருந்தது. அவர் அதை தமது தீர்க்கதரிசிகளின் உதடுகளின் மூலமாக வெளிப்படுத்தி, தமது ஊழியக்காரரின் மூலம் அதை உறுதிப்படுத்தினார். பாருங்கள்? 34தேவன் தாமே முன்குறித்தலின்படி தமது தீர்க்கதரிசிகளை ஒவ்வொரு காலத்திலும் தெரிந்து கொண்டார். இதை கவனியுங்கள். அந்த காலத்துடன் பொருந்துவதற்கென அவனுடைய சுபாவத்தை அவர் அமைக்கிறார். பாருங்கள், அவனுடைய பாணியை (style)யும் அவன் செய்யும் எல்லாவற்றையும் அவர் அக்காலத்திற்கேற்றவாறு பொருத்துகிறார். அவன் கற்றவனாயினும், கல்லாதவனாயினும் அவனை அவர் பொருத்துகிறார். அவர் வரங்களையும், அவன் பிரசங்கம் செய்யும் போக்கையும், அவன் என்ன வரங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் அவர் நிர்ணயிக்கிறார். அந்த காலத்துக்குரிய செய்தியை தேவன் முன் குறித்து, இன்னின்ன காரியங்கள் நிகழ வேண்டும் என்று தீர்மானிக்கிறார். அதை தவிர வேறொன்றும் நிகழ முடியாது. அது என்னவாயிருந்தாலும் கவலையில்லை. மனிதனுடைய சாதனைகள் என்னவாயிருப்பினும், அதன் இடத்தை அது எடுத்துக்கொள்ள முடியாது, அவர் இதற்காக தெரிந்து கொண்ட மனிதன் அறியாமையுள்ளவனாயிருக்கலாம், அல்லது வித்தியாசமான ஒரு மனிதனையும் அவர் முன்குறித்திருக்கலாம். என்னவாயினும், அவர் அவனுக்கு வரங்களையும், அவனுடைய சுபாவத்தையும், பாணியையும் அளித்து. அவன் எப்படி பேச வேண்டுமென்றும், என்னசெய்ய வேண்டுமென்றும் அவர் தீர்மானிக்கிறார். அக்காலத்திற்கென அவர் தெரிந்து கொண்ட மனிதன் அக்காலத்து ஜனங்களைக் கவரும்படி அவர் செய்கிறார், அது உண்மை. அவர் அப்படியே செய்கிறார். ஒவ்வொரு காலத்தின் முடிவிலும் சபையானது. மனிதன் தேவனுடைய வார்த்தைக்கு அளிக்கும் வியாக்கியானத்தின் மேல் சார்ந்து, உலகத்திற்கும் பாவத்திற்கும் திரும்புகின்றது. ஒவ்வொரு காலத்தின் முடிவிலும் அவர்கள் வேத பண்டிதர்கள், குருமார்கள் இவர்களின் சொற்களைக் கேட்டு இத்தகைய குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். அவர்கள் அளிக்கும் விளக்கம் எப்பொழுதுமே தவறாயுள்ளது. ஒரு முறை கூட அது தவறாயிராமல் இருந்ததில்லை. ஆனால் ஒருமுறை கூட தேவனுடைய வார்த்தை தவறினதேயில்லை. அதுதான் இவ்விரண்டிற்குமிடையேயுள்ள வித்தியாசம். 35இப்பொழுது பாருங்கள், தேவன் தாமே வேதாகமத்தை எழுதினார். தேவனால் பேச முடியும். தேவன் தன்னுடன் பேசினதாக மோசே கூறினான். “அவருடைய வார்த்தைகளை என் வாயில் போட்டார்” என்று எரேமியா கூறினான். தேவனால் எழுதவும் முடியும். அவர் தமது சொந்த விரலினாலே பத்து கட்டளைகளை எழுதினார். பாபிலோனின் சுவற்றின் மேல் அவர் எழுதினார். பழைய ஏற்பாட்டில் மாத்திரம், இரண்டாயிரம் முறை தீர்க்கதரிசிகள், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவனால் பேச முடியும், எழுத முடியும். நிச்சயமாக, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் சுவிசேஷங்களின் தொண்ணுாறு சதவிகிதம் தேவனுடைய வார்த்தைகள் அடங்கியவை; இயேசு கிறிஸ்து அதை பேசினார். எனவே தேவனால் எழுதவும், படிக்கவும், பேசவும் கூடுமானால், மற்றவர்களை அவ்விதம் செய்ய வைப்பதற்கு, அவரால் முடியாதா என்ன? அவர் மோசேயிடம், ''மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனை உண்டாக்கினவர் யார்?“ என்று கேட்டாரல்லவா? 36ஒவ்வொரு முறையும் சபை குழப்பமுறும்போது, (அவர்கள் அவ்விதம் குழப்பமுறுவர் என்று தேவன் முன்னறிந்திருந்தார். அவர் எல்லாவற்றையும் முன்னறிந்திருந்தார்), அந்த காலத்திற்கென அவர் ஒரு குறிப்பிட்ட தீர்க்கதரிசியை ஆயத்தமாக வைத்து, அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட அவர்களை, அடையாளங்களாலும், அற்புதங்களாலும், உறுதிபடுத்தப்பட்ட தமது வார்த்தையின் மூலம் அழைத்துக் கொண்டார். அவர் வாக்குத்தத்தம் செய்திருந்தபடியே, “அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்'' (மாற் 16:2). தீர்க்கதரிசி உறுதிபடுத்தப்பட்ட பின்பு, அவர் வார்த்தையின் உண்மையான விளக்கத்தை அளிக்கிறார். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் அவனை வெறுக்கின்றனர். ஒவ்வொரு சம்பவத்தையும் நீங்கள் ஆராய்ந்து பார்த்து, அது உண்மையா இல்லையாவென்று அறிந்து கொள்ளுங்கள். அவன் யாருக்கு அனுப்பப்படுகிறானோ அவர்கள் மாத்திரமே அவனை ஏற்றுக் கொள்கின்றனர். ''அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்“ (யோவான் 1:11-12). கவனியுங்கள், ஒவ்வொரு முறையும் வார்த்தையை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு காலத்தின் முடிவில் அல்லது உச்சக்கட்டத்தில் (Climax) அல்லது சந்திப்பில் (Junction); இதைக் குறித்து அநேகமுறை நான் உங்களிடம் பிரசங்கித்திருக்கிறேன். 37நோவாவின் காலத்தை - நியாயத்தீர்ப்புக்கு முன்னாலிருந்த உச்சக் கட்டதை - பாருங்கள். என்ன நேர்ந்தது? நோவாவின் குடும்பம் மாத்திரமே, அந்த மனிதன் நோவாவை விசுவாசித்தது. மற்றவர்கள் அவனைக் குறை கூறினர். முடிவில் முழு உலகமே அழிந்து போனது. ஆபிரகாமின் காலத்தில் ஆபிரகாமின் குழு மாத்திரமே விசுவாசித்தது. தூதர்கள் சோதோமில் சென்று பிரசங்கித்த போது, லோத்தும் அவனுடைய மனைவியும் இரண்டு குமாரத்திகளும் மாத்திரமே வெளியே வந்தனர். லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்து உப்பு தூணானாள். மோசேயின் காலத்தில் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் வெளிவந்தனர். பார்வோன் அவனை வெறுத்தான். எலியாவின் காலத்தில், அந்த ஏழாயிரம் பேரைத் தவிர மற்றெல்லாரும் - தேசம் முழுவதுமே - அவனை வெறுத்தனர். எரேமியாவின் காலத்தில், அவர்கள் அழுகின பழங்களை அவன் மேல் எறிந்து அவனைப் பைத்தியக்காரன் என்றழைத்தனர். ஏனெனில் அவன் அநேக நாட்களாக ஒருபுறம் படுத்திருந்து, பின்பு மறுபுறம் படுத்தான். இதன் மூலம் அவன் இஸ்ரவேலருக்கு அடையாளங்களைக் கொடுத்தான். அவர்கள் அவனை வெறுத்தனர். தீர்க்கதரிசியாகிய ஏசாயா அந்த சந்ததியை கடிந்து கொண்டதால், அவர்கள் வாளால் அவனை இரு துண்டாக்கினர். உண்மை. 38யோவான் ஸ்நானனை அவர்கள், ''அங்குள்ள அந்த காட்டு மனிதன், கூச்சலிடும் பைத்தியக்காரன்'' என்றனர். இயேசு கிறிஸ்துவுக்கு அவன் ஒரு சபையாக அளித்த சீஷர்களைத் தவிர! “இதோ அவர்” என்றான் அவன். யோவான் ஸ்நானன் ஜனங்களை ஆயத்தப்படுத்தினான். எத்தனை பேர் அவனுக்கிருந்தனர்? இயேசு வந்த போது, யோவான் ஸ்நானன் எத்தனை பேரை அவருக்களித்தான் என்று உங்கள் இரு கை விரல்களாலும் எண்ணிவிடலாம் - சொற்ப பேர் மாத்திரமே. காரியம் அப்படியிருக்க, அவருடைய இரண்டாம் வருகையின் போது எப்படியிருக்கும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். வேதத்தை உண்மையாக விசுவாசிப்பவர்கள், தங்களுடைய காலத்தில் வார்த்தையானது பகிரங்கமாக உறுதிப்படுவதைக் காணும் போது, அவர்கள் விசுவாசிக்கின்றனர். அவர்கள் விசுவாசிப்பதை எந்த முறையிலும் தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் தங்கள் சொந்த இரத்தத்தினால் தங்கள் சாட்சியை முத்தரிக்கவும் செய்கின்றனர். அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். ஒவ்வொரு காலத்திலுமுள்ள முன்குறிக்கப்பட்டவர்களுக்கே இது உரியது. அவர்கள் அதைக் கண்டு விசுவாசிக்கின்றனர். 39மற்றவர்களோ அதை காண முடிவதில்லை. அவர்கள் குருடாக்கப்படுகின்றனர். “அவர்களால் காண முடியவில்லையா?'' என்று நீங்கள் கேட்கலாம். பிலேயாமைப் போல். பிலேயாம் அபிஷேகம் பெற்ற தீர்க்கதரிசியாய் இருந்தும் கூட, அவனால் ஏன் காண முடியவில்லை? பார்வோனால் ஏன் அதை காண முடியவில்லை? தேவனுடைய கரம் கீழிறங்கி அற்புதங்கள் செய்வதை அவன் கண்டான். ஆனால் அதுவோ அவனுடைய இருதயத்தை கடினப்படுத்தினது. அது உண்மையா? தாத்தான் ஒரு யூதனாயிருந்தும் கூட அவனால் ஏன் அதை காண முடியவில்லை? அவன் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து வந்தான். புதிதாக வானத்திலிருந்து விழுந்த மன்னாவை அவன் ஒவ்வொரு இரவும் புசித்தான். அப்படியிருந்தும் அவனால் அதை காண முடியவில்லை. கோரா ஏன் அதை காணவில்லை? காய்பா ஏன் அதை காணவில்லை? அவ்வமயம் அவன் உலகில் பெரும் மதத் தலைவனாக விளங்கினான். அவர் மேசியாவென்று அவனால் ஏன் கண்டு கொள்ள முடியவில்லை? யூதாஸ் ஏன் அதை காணவில்லை? யூதாஸ் அவர்களோடு கூட இருந்து, அவர்களோடு கூட நடந்து, அவர்களோடு அற்புதமும் செய்தானல்லவா? ஆனால் தேவனுடைய வார்த்தை நிறைவேற வேண்டியதாயுள்ளது. அவர்களுடைய ஸ்தானத்தை வகிக்க அவர்கள் தோன்றினர் என்று வேதம் கூறுகின்றது. அந்த நோக்கத்திற்காகவே அவர்கள் தோன்றினர், அது உண்மை. ரோமர் 8 அப்படி கூறுகின்றது. 40விசுவாசிகள் தங்களுடைய சந்ததியில் வார்த்தை மாமிசமாவதைக் கண்டு, தேவன் பேசுவதைக் கேட்க முடிகிறது. உண்மையான விசுவாசிகள், அந்த ஏழாயிரம் பேர் - அல்லது எலியா காலத்தில் இருந்தவர் எழுநூறு பேரா? - ஏழாயிரம் என்பதுதான் சரி. எலியாவின் காலத்திலிருந்த இருபது அல்லது முப்பது லட்சம் பேர்களில் ஏழாயிரம் பேர் மாத்திரமே அது சரியென்று கண்டு கொள்ள முடிந்தது. அது உண்மை. நூற்றில் ஒருபாகம் கூட இல்லை. ஆனால் அது சரியென்று அவர்கள் கண்டு கொண்டனர். தேவன் வெளிப்பட்டதை அவர்கள் கண்டு கொண்டனர். தேவன் வெளிப்பட்டதை அவர்கள் கண்டனர். எலிசா அனுப்பப்பட்ட அந்த வயதான விதவை, அவளுக்கும் அவள் மகனுக்கும் ஒரு அடையை உண்டாக்குவதற்கென விறகு பொறுக்க சென்றாள். அதற்கு மாத்திரமே அவர்களிடம் மாவு இருந்தது. புசித்துவிட்டு மரிக்க வேண்டுமென்று அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் எலியா என்ன சொன்னான் என்று கவனியுங்கள்: ''முதலில் எனக்கு ஒரு அடையைப் பண்ணு. கர்த்தர் உரைக்கிறதாவது கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்“ (1இரா 17:13-14). அவன் அதன் பின்பு ஒரு கேள்வியும் கேட்கவில்லை. ஒரு அடையை பண்ணி அவனுக்கு கொடுக்க விரைந்து சென்றாள். அவன், ”முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி, என்னிடத்தில் கொண்டு வா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்'' என்றான். அவள் அந்த மனிதனின் சொற்களைக் கேட்டு அதற்குக் கீழ்படிந்தாள். அவள் ஒரு முன் குறிக்கப்பட்ட வித்து. 41அநேகர், ''மறுபடியும் அந்த பைத்தியக்கார கிழவன் வந்துவிட்டான். அவன் காரணமாகத்தான் தேவன் நம்மை சபித்திருக்கிறார்“ என்றனர். ஆனால் எலியா ஆகாபிடம் என்ன கூறினான் என்று ஞாபகம் கொள்ளுங்கள்: ”நீர் தான் இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவர் (1 இரா. 18:18) அவன், ''நீர்தான் இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவர் என்றான். பாருங்கள், தேவன் யாருடைய வார்த்தையை உறுதிப்படுத்துகிறார்? தம்முடைய சொந்த வார்த்தையை. அவர்கள் - அவிசுவாசிகள் அந்நோக்கத்திற்காகவே உலகில் தோன்றினர் என்று வேதம் கூறுகிறது. ஆனால் உண்மையான விசுவாசியோ அக்காலத்துக்குரிய வார்த்தை மாமிசமாகி, தேவன் மனித உதடுகளின் மூலம் பேசி, அவர் என்ன செய்வாரென்று கூறியதை பிழையின்றி செய்து முடிப்பதைக் காணும்போது, அத்துடன் அது முற்று பெறுகிறது. 42மற்றவர்களைக் கவனியுங்கள். அடையாளங்களைக் கவனிக்காதீர். நீங்கள் அடையாளங்களைக் கவனித்தால். உலகம் எவ்வளவு நிச்சயமாயுள்ளதோ, அவ்வளவு நிச்சயமாக நீங்கள் ஏமாந்து போவீர்கள். கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். வார்த்தையை மாத்திரம் கவனியுங்கள். அந்த தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். எபிரேய தீர்க்கதரிசிகள் அங்கு நின்று கொண்டிருக்கின்றனர். சிதேக்கியா இரண்டு பெரிய கொம்புகளையுடையவனாய், ''நான் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி'' என்கிறான். அது உண்மை. “என்னுடன் முன்னூற்று தொண்ணூற்றொன்பது பேர் இங்கேயே இருக்கின்றனர். எங்கள் மேல் பரிசுத்த ஆவி தங்கியிருந்து, அந்த தேசம் நம்மைச் சேர்ந்தது என்று உறுதி கூறுகின்றது. நாம் சென்று அதை கைப்பற்றுவோம். ஆகாபே, இந்த கொம்புகளைக் கொண்டு விரோதிகளை தேசத்திலிருந்து விரட்டியடிப்பீர். ஏனெனில் தேவன் அந்த தேசத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்'' என்றான். 43ஆனால் அந்த பக்தியுள்ள, நல்லவனான யோசபாத் கூறுவதைக் கவனியுங்கள்: “இன்னும் ஒருவன் உங்களிடம் இல்லையா?'' ''இன்னும் ஒருவனா? நானூறு பேர் ஏகமனதாயுள்ளனர்'' ஆகாப், “ஆம், இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் அவனை நான் வெறுக்கிறேன். அவன் எப்பொழுதும் எங்களிடம் கூச்சலிட்டு, நாங்கள் எவ்வளவு பெரிய பாவிகள் என்று கூறுகிறான். அவனை நான் வெறுக்கிறேன். அவன் தான், ”இம்லாவின் குமாரனாகிய மிகாயா'' என்றான். யோசபாத், ''ராஜா அப்படி சொல்ல வேண்டாம். அவனை அழைத்து வாருங்கள். அவன் என்ன சொல்கிறான் என்று கேட்போம்'' என்றான். எனவே அவர்கள் அவனைக் கொண்டு வந்தனர். அவன், “இன்றிரவு எனக்குத் தருணம் கொடுங்கள். கர்த்தர் அதைக் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்க்கிறேன்'' என்றான். ஆகாப், ''உண்மையைத் தவிர வேறொன்றையும் என்னிடம் சொல்லக் கூடாது என்று கட்டளையிடுகிறேன்'' என்றான், அந்த மனிதன் மிகாயாவிடம், ''நல்ல விதமான ஐக்கியத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள விரும்பினால், மற்றவர்கள் கூறினதையே நீயும் கூறு'' என்றான். மிகாயாவோ, “தேவன் கூறுவதை மாத்திரமே நான் கூறுவேன்” என்றான். பாருங்கள்? அடுத்த நாள் காலை அவர்களெல்லாரும் கூடினர். இராஜாக்கள் தங்கள் அங்கிகளை அணிந்து கொண்டு வாசலகளினருகில் அமர்ந்தனர். புகழ் வாய்ந்தவர்கள் அனைவரும் அங்கிருந்தனர், தீர்க்கதரிசிகள் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்கள், “பைத்தியக்காரனே, இப்பொழுது என்ன சொல்கிறாய்?'' என்றனர். மிகாயா, “போங்கள். ஆனால் இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல சிதறப்பட்டதைக் கண்டேன்” என்றான் (1 இரா. 22:17) 44அப்பொழுது சிதேக்கியா அவனுடைய கையினால் மிகாயாவின் வாயில் அடித்தான். தீர்க்கதரிசி வேறொரு தீர்க்கதரியின் வாயில் அடித்தான். அபிஷேகம் பெற்ற இரண்டு தீர்க்கதரிசிகளும் அங்கு நின்று கொண்டு தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர். நானூறுக்கு விரோதமாக ஒருவன். அவர்கள் மிகவும் பலமுள்ளவர்களாக காணப்பட்டனர். ஆலோசனைக்காரர் அநேகர் இருக்கும் இடத்தில், பாதுகாப்பு எப்பொழுதும் இராது. அவர்கள் எதைக் குறித்து ஆலோசனை செய்கின்றனர், அவர்களுடைய ஆலோசனை என்னவென்பதை அது பொறுத்தது. அநேக ஆலோசனைக்காரரின் ஆலோசனை சரியென்று ராஜா ஏற்றுக் கொண்டதால், அவனுக்குப் பாதுகாப்பு இராமற் போயிற்று. அவன் மாத்திரம் சுருளை (Scroll) திரும்பி பார்த்திருப்பானானால், எலியா அதில் என்ன கூறியிருக்கிறான் என்பதை அறிந்திருப்பான். 45மிகாயாவுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. ஒருக்கால் கர்த்தர் அவனை அதற்காக மன்னித்திருப்பார். முதலாவதாக. அவன் தீர்க்கதரிசியாயிருந்த காரணத்தால் தேவன் கூறுகிறது என்னவென்பதை அறிந்து கொள்ள அவன் தேவனுடைய சமூகத்திற்கு சென்றான். அங்கு தேவன் என்ன கூறினார் என்பதை அறிந்து கொண்டான். அவன், ''கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பதையும். பரலோகத்தின் ஆலோசனைக்காரரெல்லாம் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டேன். அவர், “ஆகாப் போய் கிலேயாத்தில் விழுந்து, அதன் மூலம் அவனைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறும்படி செய்யத் தக்கவன் யார்?'' என்று கேட்டார். பாருங்கள், தீர்க்கதரிசனம், எலியா ஏற்கனவே ஆகாபிடம், ''நாய்கள் உன் இரத்தத்தை நக்கும்'' என்று தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான், பாருங்கள்? அப்பொழுது மிகாயா, “ஒரு ஆவி புறப்பட்டு வந்து, நான் போய் 'ஆகாபின் தீர்க்கதரிசிகளின் வாய்க்குள் நுழைந்து, அவர்கள் பொய்யை தீர்க்கதரிசனம் உரைக்கச் செய்வேன்' என்று கூறுவதைக் கண்டேன்'' என்றான். 46ஆகாபின் தீர்க்கதரிசிகள் அனைவரும் வேத பாண்டித்யத்தினால் நிறைந்தவர்களாய் பெருமை கொண்டு, அவர்கள் கூறுவதெல்லாம் சரியே என்று எண்ணியிருந்தனர். அவர்களோ அந்த நேரத்திற்குரிய வார்த்தை என்னவென்பதை காணத் தவறினர். பாருங்கள்? எனவே கர்த்தர் அந்த ஆவியிடம், “நீ வெற்றி பெறுவாய், புறப்பட்டுச் செல்” என்றார். மிகாயா அதை எடுத்துக் கூறினபோது, அவர்கள் அசுத்த ஆவியினால் தீர்க்கதரிசனம் உரைத்தனர் என்பது ருசுவானது. அவர்களுக்கு விரோதமாக ஒன்று பேசப்படுவதை அவர்கள் கேட்டபோது, தொலைபேசியின் 'ப்ளக்கை' (Plug) அவர்கள் பிடுங்கியோ, அல்லது வானொலிப் பெட்டியை அணைத்துவிட்டோ வெளி நடந்திருப்பார்கள், என்ன நிகழ்ந்ததென்று கவனியுங்கள். மிகாயா தான் பெற்ற தரிசனத்தை எழுதப்பட்ட வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்தான். அதனால் அவன் உண்மையை அறிந்து கொண்டான். ஆகாப், ''நான் திரும்பி வருமளவும்... அவனை சிறையிலடைத்து இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள். நான் திரும்பி வந்து அவனைப் பார்த்துக் கொள்வேன்'' என்றான். அதற்கு மிகாயா, ''நீர் திரும்பி வருவீரானால், கர்த்தர் என்னிடம் பேசினதில்லை'' என்றான். அவனுடைய தரிசனம் அந்நேரத்துக்குரிய ஒவ்வொரு வார்த்தையுடனும் பிழையின்றி பொருந்தினது என்பதை அவன் அறிந்திருந்தான். அது ஆகாபின் காலமாயிருந்தது. சகோதரனே, இதுவே பாபிலோனிலிருந்து வெளியே அழைக்கப்படும் நேரமும் காலமுமாயுள்ளது சாயங்கால வெளிச்சம் இங்குள்ளது. ஒளியுள்ள போதே ஒளியில் நடவுங்கள். கவனியுங்கள். விசுவாசிகள் வார்த்தை வெளிப்படுவதைக் கண்டு அதை விசுவாசித்தனர். இயேசுவும் ''என் ஆடுகள் என் சத்தத்தை, என் வார்த்தையை, இக்காலத்தில் அடையாளங்களை அறிந்திருக்கின்றன. அந்நியர்களை அவர்கள் பின்பற்றுவதில்லை'' என்று கூறியுள்ளார். 47இப்பொழுது நமது பிரசங்கத்தின் பொருளுக்கு நாம் திரும்பச் செல்வோம். நான் பொருளை விட்டு தூரச் சென்று விடுகிறேன் என்பதை அறிகிறேன். ஜெபவரிசைக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். மறுபடியும் நான் பேச எடுத்துக் கொண்ட பொருளுக்கு வருவோம். ஒவ்வொரு முறையும் நிகழ்கின்ற விதமாகவே, நான் மீண்டும் பொருளை விட்டு புறம்பே செல்ல வழியுண்டு. கர்த்தர் மல்கியா 3-ல் வாக்குரைத்தபடி, தமது தீர்க்கதரிசியாகிய யோவான் ஸ்நானனை அனுப்பினார்: “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன்; அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான். யோவான் ஸ்நானனும் அதையே அறிவித்தான், ஏசாயா 40:3-லும், கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிருக்கும்'' என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தான். பாருங்கள்? அந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும், கவனியுங்கள், வேதவாக்கியங்கள் அவனை அடையாளம் காண்பித்தன. அவர்கள் யோவான் ஸ்நானனிடம், ''நீ மேசியாவா?'' என்று கேட்டார்கள், அவன், “நான் இல்லை'' என்றான். ''நீ எரேமியாவா? அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனா?'' அவன், ''அல்ல, ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறபடி, நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்“ என்றான். அவர்கள் அதை விசுவாசித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களோ? இல்லை, ஜயா. ஏன்? அவன் அவர்கள் ஸ்தாபனத்தின் மூலமாக வரவில்லை, அவனுக்கு ஒன்பது வயதானபோது அவன் வனாந்தரத்துக்குச் சென்று, முப்பது வயதில் திரும்ப வந்தான். அவனுடைய செய்தி வேத பள்ளியின் மூலம் வரக்கூடாத அளவுக்கு அவ்வளவு மகத்தான செய்தியாயிருந்தான். அச்சமயம் ஒருவர் ஒருபுறமாகவும் மற்றவர் வேறுபுறமாகவும் போய்க் கொண்டிருந்தனர். அவனுடைய தகப்பனான சகரியாவின் மரணத்திற்குப் பிறகு, கர்த்தர் அவனை வனாந்தரத்துக்கு அனுப்பினார். அவனுடைய தகப்பன் ஒரு ஆசாரியனாயிருந்த போதிலும், அவன் அந்த வழியில் செல்லவில்லை. ஏனெனில் தீர்க்கதரிசிகள் அம்முறையில் தோன்றுவதில்லை. அவர்கள் கரடுமுரடான நிலங்களிலிருந்து, வனாந்தரத்திலிருந்து வருபவர்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்களென்றும், எப்படி காட்சியில் தோன்றுகிறார்களென்றும், அவர்களுடைய வரலாறு என்னவென்றும் ஒரு மனிதனுக்கும் தெரியாது. அவர்கள் புறப்பட்டு வந்து தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கின்றனர். தேவன் அவர்களை எடுத்துக் கொள்ளும்போது, அவர்கள் போய்விடுகின்றனர். அவர்கள் அந்த சந்ததியை ஆக்கினைக்குட்படுத்தி, அவருடைய வார்த்தைக்குள் நுழைந்துகொண்டு, அந்த மகத்தான நாள் வர எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 48சபை யோவான் ஸ்நானனை விசுவாசிக்கவில்லை. ஏனெனில் அவன் அவர்களால் அறியப்படவில்லை. அவர்களுடைய புத்தகங்களில், அவன் குரு பட்டம் பெற்றதாக எங்கும் குறிந்து வைக்கப்படவில்லை. எனவே அவர்கள் அவனைப் புறக்கணித்தனர். பாருங்கள், உறுதிபடுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையை அவர்கள் ஒவ்வொரு எழுத்தாக விசுவாசிக்கவில்லை. பாருங்கள்? அவனை நிரூபிக்க இரண்டு வேதவாக்கியங்கள் இருந்தன: மல்கியா 3, ஏசாயா 40:3. இவ்விரு வேதவாக்கியங்களும், கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ண ஒரு மனிதன் தோன்றுவான் என்று அறிவித்தன. அந்த தகுதி ஒவ்வொன்றையும் அவன் பெற்றிருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருக்க வேண்டும். ''நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடத்திற்கு அனுப்புகிறேன். அவன் எல்லா விதத்திலும் கரடுமுரடாக இருந்தான். அவனுடைய சுபாவம் எப்படி எலியாவின் சுபாவத்துடன் பொருந்தினது என்பதைக் கவனியுங்கள். எலியா வனாந்தரத்து மனிதனாக இருந்தான்; அது போலவே யோவான் ஸ்நானனும். அவன் மிருதுவான மனிதனல்ல, கரடுமுரடான மனிதன். மறுபடியும் கவனியுங்கள். எலியா பெண்களை வெறுத்தான். யேசபேலிடம் அவன் அவளுடைய முக வர்ணத்தைக் குறித்தும் அவள் எங்கு தவறு செய்தாள் என்றும் எடுத்துக் கூறினான். யோவானும் அப்படியே. எலியாவைக் கொன்று போட யேசபேல் முயன்றாள். அவனுடைய தலையை வாங்கிப் போடுவதாக அவள் தன் தேவர்களின் மீது ஆணையிட்டாள். ஏரோதியாளும் அப்படிச் செய்தாள். பாருங்கள்? எப்பொழுதும் அவர்களுடைய செய்தியைக் கவனியுங்கள். அவர்கள் என்ன செய்தனர் என்பதைக் கவனியுங்கள். அக்காலத்து மனிதர்கள் மாத்திரம் வேதம் என்ன கூறுகிறதென்றும், அந்த மனிதனின் சுபாவம் என்னவென்றும், அவன் அந்த காலத்தில் வேதவாக்கியங்கள் கூறினதுடன் பொருந்தினான் என்றும் அறிந்திருப்பார்களானால், அவனை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய அரை டஜன் பேர் மாத்திரமே அவனை அறிந்திருந்தனர். அது உண்மை. அரை டஜனுக்கு மேல் அவன் யாரென்பதை அறிந்து கொள்ளவில்லை. அவன் கூறுவதைக் கேட்க அவர்கள் சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. பாருங்கள்? ஏன்? அந்நேரத்திற்கென அளிக்கப்பட்ட தீர்க்கதரிசனம் அவனை அடையாளம் காண்பிக்கிறதென்று அவர்கள் விசுவாசிக்கவில்லை. 49கவனியுங்கள், அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து, ''படிப்பறியாத பைத்திக்காரன், காட்டுமிராண்டி, பள்ளி படிப்பு எதுவுமில்லை“ என்றெல்லாம் கேலி செய்தனர். வழக்கப்படி, அவர்கள் அவனுடைய இலக்கணத்தையும் அவன் உடுத்தியுள்ள விதத்தையும் ஆதாரமாகக் கொண்டு அவனை எடை போடுகின்றனர். அவன் ஆட்டுத்தோல் உடையைத் தரித்தவனாய், ஒட்டக மயிர் வார்க்கச்சையை தன் அரையில் கட்டிக் கொண்டிருந்தான். அவன் தேகம் முழுவதும் உரோமம் வளர்ந்திருந்தது. அவனுக்கு சபை எதுவுமில்லை, எவ்வித ஒத்துழைப்புமில்லை. அப்படிப்பட்ட ஒருவனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்பிரபஞ்சத்து தேவனை அவர்கள் வழிபட்டு வந்தனர். பாருங்கள்? யந்நேயும், யம்பிரேயும் போல கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்ப மாட்டார்கள் என்று நான் கூற வரவில்லை. நீங்கள் செய்யவேண்டியது. அளிக்கப்படும் மூல செய்தியை தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்க்குதலாம். அப்பொழுது நீங்கள், நாம் எந்த காலத்திலிருக்கிறோமென்றும், இக்காலத்திற்கென என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளதென்றும் அறிந்து கொள்வீர்கள். 50தேவனுடைய ஒழுங்கு முறைமையின்படியே, யோவான் ஸ்நானனின் தீர்க்கதரிசனம் உறுதிப்படுத்தப்பட்டது. அது எவ்வளவு பிழையற்றது என்று கவனியுங்கள். வேதாகமம், “தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது'' என்றுரைக்கிறது. இயேசு வார்த்தையாயிருந்தார். வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக வரப்போகிறார் என்று யோவான் ஸ்நானன் தீர்க்கதரிசனம் உரைத்தான். வார்த்தையாகிய இயேசு தீர்க்கதரிசியாகிய யோவான் ஸ்நானனிடத்தில் தண்ணீரில் (ஞானஸ்நானத்தின் போது வந்தார்). ஓ எவ்வளவு அழகாயுள்ளது! எவ்வளவு தவறாததாக அது உள்ளது பாருங்கள்? அந்த காலத்தில் தேவனுடைய வார்த்தை அரிதாயிருந்தது. அப்பொழுது தீர்க்கதரிசி வந்து, ”வார்த்தையின் சத்தம் நானே“ என்கிறான். அவர்கள், ''நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டனர். அவன், “அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்ப்பதற்கு நான் பாத்திரனல்ல, உங்கள் மத்தியில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். அவரே பரிசுத்த ஆவியிலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக் கூடை அவர் கையில் இருக்கிறது. அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, பதரை அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார். கோதுமையையோ களஞ்சியத்தில் கொண்டு சேர்ப்பார்'' என்றான். ஓ, என்ன ஒரு தீர்க்கதரிசி! இயேசு அவனைக் குறித்து, ஸ்திரீகளில் பிறந்தவர்களிலே இன்று வரைக்கும் யோவான் ஸ்நானனைப் போல் பெரியவன் ஒருவனுமில்லை என்று கூறியுள்ளார். ஓ எத்தகைய ஆரவாரச் செய்தி அவன் எந்நிலையில் இருந்தான் என்பதை நன்கு அறிந்திருந்தான். தேவன் கூறுவதை அவன் கேட்டான். அது தேவனுடைய வார்த்தையுடன் சரியாக பொருந்தினது. எனவே ஜனங்கள் என்ன கூறினாலும் அவன் கவலைப்படவில்லை. எப்படியாயினும் அவன் அதை பிரசங்கித்து தீர்க்கதரிசனம் உரைத்தான். கவனியுங்கள், மனிதன் ஒருவன் சத்தியத்துக்காக நிற்கும் போது, அந்த மனிதனுக்கு சத்தியத்தை உறுதிப்படுத்த தேவன் கடமைபட்டவராயிருக்கிறார். 51மோசே எகிப்துக்குச் சென்று, ''நான் வனாந்தரத்திலிருந்தபோது, ஒரு மரம் தீப்பிடித்திருப்பதைக் கண்டேன். ஆனால் அது எரிந்து போகவில்லை. நான் மரத்தினருகில் சென்ற போது, அங்கு பெரிய அக்கினி ஸ்தம்பம் தொங்கிக் கொண்டிருந்தது, அப்பொழுது ஒரு சத்தம் 'நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்' என்றுரைத்தது. அவர் என்னிடம் ஒரு கோலை எடுத்துக் கொண்டு இங்கு வந்து அற்புதங்களைச் செய்யும்படி கூறினார். தேவன் தமது வார்த்தையை உறுதிப்படுத்துவார் என்றான். அவன் கோலை நீட்டின் போது வண்டுகள் தோன்றின, அந்தகாரம் சூழ்ந்தது. அவன் தீர்க்கதரிசி என்பதை உறுதிப்படுத்த, அவர் விசுவாசிகளை மலையடி வாரத்தில் ஒன்று கூட்டினார். அப்பொழுது தேவன் அதே அக்கினி ஸ்தம்பத்தில் அதே மலையின் மேல் இறங்கி வந்து, அவன் கூறினது உண்மையென்று நிருபித்தார். இந்நாளில் அவர் என்ன செய்தார் என்பதை கவனியுங்கள். 52அதையே, வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வந்து வேதவாக்கியங்கள் அவன் யாராயிருப்பானென்று கூறுகின்றனவோ அதை உறுதிபடுத்துகிறது. இப்பொழுது துரிதமாகப் பார்ப்போம். மனிதன் தீர்க்கதரிசனத்திற்கு அளித்த வியாக்கியானத்திற்கு முரணான விதத்தில் இயேசு தோன்றினார். மனிதன் அதற்கு சொந்த வியாக்கியானத்தையளித்தான். நிச்சயமாக. பிரஸ்பிடேரியன்கள் தங்கள் ஸ்தாபனத்திலிருந்து தான் வர வேண்டுமென்று எண்ணுகின்றனர். தேவன் ஒரு மனிதனை எழுப்பும்போது, ஒவ்வொரு ஸ்தாபனத்திலிருந்தும் ஒருவர் எழும்புவதைக் கவனியுங்கள். ஆம், அது எப்பொழுதும் அவ்விதமாகவே உள்ளது. அவர்களுக்கு எங்கும் யந்நேயும் யம்பிரேயும் இருக்கின்றனர். கவனியுங்கள், அவர்கள் வார்த்தையின் ஒரு பாகத்தை மாத்திரம் எடுத்துரைக்கின்றனர். ஆனால் தீர்க்கதரிசியின் வார்த்தையின்படி, தேவனுடைய வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். 53அவர்கள் வழக்கப்படி, மறுபடியும் அதை இழந்துவிட்டனர். அவர்கள் அவரை குறி சொல்பவன், பிசாசு, பெயல்செபூல் என்றழைத்து, அவர் தம்மை தேவனுக்கு சமமாக்கிக் கொண்டார் என்று குற்றஞ்சாட்டினர். வேதம் அவர் தேவன் என்று கூறுகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஏசாயா அவரைக் குறித்து, “அவர் நாமம் வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்'' என்று ஏசாயா 9:6-ல் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறான். அவருக்கு பிறகு வேறெந்த பிதாக்களும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் அவரே ஆதியில் பிதாவாயிருந்தார், அவர் ஒருவர் மாத்திரமே பிதா. அவர், ''பூமியில் ஒருவனையும் பிதாவென்று அழைக்க வேண்டாம் என்று கூறினார். அவர் வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, ஆலோசனைக் கர்த்தர்; சமாதானப் பிரபு, நிச்சயமாக. அவருக்கு என்ன செய்வார்கள் என்று எல்லா தீர்க்கதரிசிகளும் உரைத்தனரோ, அதையே அவர்கள் அவருக்கு செய்தனர். இன்றைக்கு தேவனுடைய வார்த்தை கூறியபடியே லவோதிக்கேயா சபையின் காலத்திலும் அவர்கள் அவரைச் சபைக்கு வெளியே தள்ளினர். “குருடர், நிர்வாணி, அதை அறியாமலிருக்கின்றனர்'' வேதத்தின் தீர்க்கதரிசிகள் உரைத்தபடியே, மனிதனின் பாரம்பரியங்களினால் அவர்கள் குருடாக்கப்பட்டு, தீர்க்கதரிசனம் அவர்களைக் குறித்து உரைத்தபடியே, வார்த்தையாகிய அவரை அவர்கள் சபைக்குப் புறம்பே தள்ளினார்கள். 54கவனியுங்கள், துரிதமாக. இதை இழந்து போக வேண்டாம். இது தான் நமது செய்தியின் தலைப்பு: இயேசு எவ்வாறு இந்த இரண்டு சீஷர்களுக்கு தம்மை அவர்களுடைய மேசியாவென்று வெளிப்படுத்தினார் என்று. எல்லா கண்களும் இங்கு பார்க்கட்டும் நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்களே, இதை இழந்து போக வேண்டாம். வேதாகமம் தேவனுடைய வார்த்தையென்றும், அது மனித உதடுகளின் மூலமாகவும், மனிதர்களை உபயோகித்தும் எழுதப்பட்டதென்றும் நாங்கள் உங்களுக்கு எடுத்துரைக்க இதுவரை முயன்றோம். தேவனால் எழுதவும் பேசவும் முடியும். அவர் என்னசெய்ய விரும்புகிறாரோ அதை அவரால் செய்ய முடியும். ஆனால் இதை செய்ய அவர் மனிதனைத் தெரிந்து கொண்டார். ஏனெனில் அதை எழுதின மனிதர்கள் தேவனுடைய பாகமாயிருக்கின்றனர். எனவே தேவனே வேதாகமத்தை எழுதியதற்கு அது சமமாகிறது. அவர்களுடைய சொந்த மனுஷ ஞானத்தினால் அவர்கள் என்ன எழுதினர் என்று அவர்களுக்கே தெரியவில்லை. அவர்கள் ஒருக்கால் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம், ஆயினும் அவர்கள் அதை எழுதினர். அவர்களால் அதை எழுதாமல் இருக்க முடியவில்லை. “தேவனுடைய மனுஷர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டார்கள் என்று வேதம் கூறுகிறது”. (2பேது 1: 21). தேவன் அவர்களுடைய கைகளையசைத்து எழுதினார், அவர்களுடைய கண்களையசைத்து தரிசனங்களை அருளினார். அவர்கள் கண்டதை தவிர வேறொன்றையும் அவர்களால் கூற முடியவில்லை. வேறொன்றையும் அவர்களால் பேச முடியவில்லை. ஏனெனில் தேவன் அவர்களுடைய நாவுகளையும், விரல்களையும், சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பையும், அவருடைய கட்டுக்குள் கொண்டு வந்தார். எல்லாமே தேவனுடைய அசைவுக்குள் வந்தன. அவர்களை தேவர்கள் என்று வேதம் அழைப்பதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் தேவனுடைய ஒரு பாகமாயிருந்தனர். ஆனால் அவரோ தேவனுடைய பரிபூரணமாயிருந்தார். 55வார்த்தையாகிய இயேசு, எவ்விதம் இருதயம் நொறுங்குண்டிருந்த இவ்விரு சீஷர்கள், அவர் தான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாகிய மேசியாவென்று அறிந்து கொள்ளும்படி செய்தார் என்று கவனியுங்கள். அவர் என்ன செய்தாரென்று கவனியுங்கள். தீர்க்கதரிசனங்களைக் காணும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார். கவனியுங்கள், “தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே'' என்று அவர்களைக் கடிந்து கொண்டார். ''சரி, ஸ்தாபனம் இதைக் குறித்து என்ன சொல்கிறது?'' என்று அவர் கேட்கவில்லை. அவர்கள் முழு வரலாற்றையும் அவருக்கு எடுத்துக் கூறினார்கள். நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தெரியும், அவர்கள் வருத்தமுற்றிருந்தார்கள். அவர்கள் அவரிடம், “எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ?'' என்றனர். ''எவைகள்?'' என்று ஒன்றும் அறியாதது போல் அவர் கேட்டார். சில சமயங்களில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்ப்பதற்கு அவர் இவ்விதம் நடந்து கொள்கிறார். பாருங்கள்? ''எவைகள்? அவர் யார்? என்ன நடந்தது?'' என்று அவர் கேட்டார். ''நீர் என்ன அந்நியரோ?'' அவர்களுடன் மூன்றரை ஆண்டு காலம் வாழ்ந்த அவரிடம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். ஆயினும் அவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. “எவைகள்? என்ன நடந்தது?” என்று அவர் கேட்டார். அவர்கள், “நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே. அவர் தீர்க்கதரிசியாயிருந்தார். அதைக் குறித்து எங்களுக்கு எவ்வித சந்தேகமுமில்லை, அவர் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் வாக்கிலும் செயலிலும் வல்லவராயிருந்தார். இக்காலத்து தேவனுடைய தீர்க்கதரிசி என்று அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணம் அவர் மகத்தான செயல்களைப் புரிவதை நாங்கள் கண்டிருக்கிறோம். அது எங்களுக்குத் தெரியும். அவர் இஸ்ரவேலரை மீட்டி ரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்'' என்றனர். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “அவரைக் குறித்து தீர்க்கதரிசிகள் சொன்ன யாவும் நிறைவேறும் என்று விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத, மந்த இருதயமுள்ளவர்களே” என்று கடிந்துகொண்டார். பாருங்கள்? அவரைக் கவனியுங்கள். தீர்க்கதரிசனத்திற்கு திரும்பி செல்லுங்கள். அவரை விசுவாசிப்பதாக கூறிக் கொள்ளும் விசுவாசிகளுக்கு அது எப்படிப்பட்ட கடிந்து கொள்ளுதலாயுள்ளது! 56அவர் எப்படி அந்த பொருளை அணுகினார் என்று கவனியுங்கள். அவர் நேரடியாக, 'நான் தான் உங்கள் மேசியா' என்று கூறவில்லை, வேண்டுமானால் அவர் அப்படி செய்திருக்கலாம். ஏனெனில் அவர் மேசியாவாயிருந்தார். அவர் தம்மை வார்த்தையுடன் ஒன்றுபடுத்திக் கொள்கிறார் என்பதை கவனியுங்கள். அப்பொழுது அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவரைக் குறித்து தீர்க்கதரிசிகள் உரைத்த யாவையும் அவர் விவரித்துக் காண்பித்தார். அவர்கள் அதைப் புரிந்து கொண்டால், அவர்கள் தேவனுடைய பிள்ளைகளென்று தங்களை அழைத்துக் கொள்ள முடியும். மேசியா வரும் காலத்தில் அவர்கள் எதை எதிர்நோக்கியிருக்க வேண்டுமென்று தீர்க்கதரிசிகள் முன்னறிவித்திருந்தனரோ, அதற்கு, அவர்களுடைய கவனத்தைத் திருப்பினார். யோவான் ஸ்நானனும் கூட அப்படியே, வார்த்தை தன்னுடைய செய்தியை அடையாளம் காட்டும்படி செய்தான். எந்த உண்மையான தீர்க்கதரிசியும் அதைதான் செய்வான். ஆம். அவன் நேரடியாக ''நான் தான் அவன்'' என்று கூறவில்லை. அப்படி செய்தால் அவன் உண்மையான தீர்க்கதரிசியல்ல. பாருங்கள்? அவன், “வேதவாக்கியங்களுக்கு செல்லுங்கள்'' என்றான். பாருங்கள், தேவன் தமது வழியை ஒருபோதும் மாற்றிக் கொள்வதில்லை. அவர்கள், “நாங்கள் மோசேயை அறிந்திருக்கிறோம்” என்றனர். அவர், ''நீங்கள் மோசேயை அறிந்திருப்பீர்களானால் என்னையும் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால் மோசே என்னைக் குறித்து எழுதியிருக்கிறான்'' என்றார். மேலும் அவர், “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே, எனவே வேதவாக்கியங்களுக்குச் சென்று அதை கண்டு கொள்ளுங்கள்” என்றார். 57அவர், தாம் செயல்புரியும் வழிகளை ஒருபோதும் மாற்றுவதில்லை. அது ஒருபோதும் மாறினதில்லை. அவரால் ஒருபோதும் மாறவே முடியாது. ஏனெனில் அவர் மாறாத தேவனாயிருக்கிறார். பாருங்கள் எம்மாவூருக்கு போய்க் கொண்டிருக்கும் கிலெயோப்பாவிடமும் அவனுடைய நண்பனிடமும் அவர் சேர்ந்துகொண்டு, வேதவாக்கியங்களைக் காணும்படி அவர்களிடம் வேண்டினார். அவர், “மேசியாவைக் குறித்து தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறுமென்று விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே' என்றார் அவர். ஓ, என்ன ஒரு நாள். யோவானும் அதைதான் செய்தான்: ''வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். 'வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய ஒரு சத்தம் உண்டாயிருக்கும்' என்று எழுதியிருப்பதை அதில் காணுங்கள். நான் எங்கிருந்து வருகிறேன்?'' என்று அவன் கேட்டான். அது அவர்களுக்கு எல்லாவற்றையும் வெளிப்படையாக்கி தந்திருக்கும். உண்மை. இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் புரியும் செயல்களை நாம் காணும் போது, நமக்கும் எல்லாம் வெளிப்படையாயிருக்க வேண்டும். அவர் அன்று ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்“ என்று கூறினார். இன்றும் அதையே நாம் செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். 58கவனியுங்கள், அவர் மோசேயின் தீர்க்கதரிசனத்தில் தொடங்கினார். “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மை குறித்து சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” என்று வேதம் கூறுகின்றது. அவர் மோசேயில் தொடங்கினார். மோசே, ''உன் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை உன் நடுவே எழுப்பப் பண்ணுவார்'' என்றான். இயேசு ஒருக்கால் இப்படி கூறியிருக்கலாம்: “கிலெயோப்பாவே, இங்குள்ள அவனது நண்பனே, இந்நாட்களில் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார் என்று மோசே தீர்க்கதரிசனம் உரைக்கவில்லையா? சிலுவையிலறையப்பட்ட இந்த மனிதன் அந்தத் தகுதியை பெற்றிருந்தாரா? மோசே இவ்விதம் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசி உண்டாயிருக்கவில்லை. இப்பொழுது இந்த மனிதன் எழும்பினார். இந்த மனிதனின் முன்னோடி இந்த மனிதனைக் குறித்து என்ன கூறினார்?” என்று கேட்டிருப்பார். புரிகிறதா? எல்லா தீர்க்கதரிசிகளும் அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருந்தனர். அவர் எம்மாவூர் சீஷர்களிடம் பேசினார். அவர் பேசுவதைக் கேட்க மிகவும் சுவாரசியமாய் இருந்திருக்கும். அவர் பேசுவதைக் கேட்க நீங்கள் விரும்பியிருப்பீர்கள் அல்லவா? தீர்க்கதரிசிகள் அவரைக் குறித்து பேசினதை அவர் விவரித்துக் கூறினபோது, அதை கேட்க நான் விரும்பியிருப்பேன். அது அவர் என்று நேரடியாக கூறாமல், அவர்களுக்கு தீர்க்கதரிசனத்தைக் காண்பித்தார். அவர் ''இவ்வாறு நிகழும் என்று தீர்க்கதரிசிகள் கூறியிருக்கிறார்கள்“ என்று மாத்திரம் கூறினார். 59நாம் சில நிமிடங்கள் சென்று, அவர் வார்த்தையை எடுத்துரைப்பதை சற்று கவனிப்போம். பாருங்கள். வார்த்தையே தம்மைக் குறித்து கூறப்பட்ட வார்த்தையை எடுத்துரைக்கிறது. வார்த்தையே தம்மைக் குறித்து கூறப்பட்ட வார்த்தையை எடுத்துரைக்கிறது. அது அவர்தான் என்று நேரடியாகக் கூறாமல், வார்த்தை பேசுவதற்கு விட்டுக் கொடுக்கும் போது, அவர் யாரென்பதை அவர்கள் அறிந்து கொள்கின்றனர். மாம்சத்திலிருந்த வார்த்தை எழுதப்பட்ட வார்த்தையை எடுத்துக் கூறி, அவரை அதனுடன் ஒன்றுபடுத்திக் கொள்கிறார். அவர் எடுத்துக் கூறுவதை நாம் கேட்போம். அவர்களுக்கு அண்மையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அதாவது, சிலுவை மரணமும், உயிர்த்தெழுதலும், காலியான கல்லரையும் தெரிந்திருந்தது. அவர் தம்மைக் குறித்து எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்களுக்கு நேரடியாக சென்றுவிட்டார். இதையெல்லாம் அவர் எம்மாவூர் சீஷரிடம் கூறியிருப்பார் என்று நாம் கற்பனை செய்து பார்க்கலாம். இதைக் காட்டிலும் அவர் அதிகமாக கூறியிருக்க முடியும். அவர் எம்மாவூர் சீஷரிடம் இவ்விதம் கூறினாரென்று கற்பனை செய்து கொண்டு அதை கேட்போம். 60அவர் இப்படி கூறியிருக்கலாம்: “சகரியா 11:12ஐ நாம் பார்ப்போம். மேசியா முப்பது வெள்ளி காசுக்கு விற்கப்பட வேண்டுமென்று சகரியா தீர்க்கதரிசி எழுதி வைக்கவில்லையா? இப்பொழுது தானே நீங்கள் அவர் முப்பது வெள்ளிகாசுக்கு விற்கப்பட்டதாக என்னிடம் கூறினீர்கள். மேலும் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம். உங்களுக்கு எந்த வசனம் என்று தெரியுமா?” சகரியா 11:12. “சங்கீதம் 41:9-ல் தாவீது என்ன கூறியிருக்கிறான் என்று கவனித்தீர்களா? அவருடைய சிநேகிதனே அவரை மறுதலிப்பான். சகரியா 13:7-ல் அவருடைய சீஷர்கள் அவரைப் புறக்கணித்தனர். சங். 35:11-ல் கள்ள சாட்சிகள் அவர் மேல் குற்றஞ் சாட்டுகின்றனர். அப்படி நடந்தது என்று நீங்கள்தானே இப்பொழுது கூறினீர்கள்? ஏசாயா. 53:7, தம்மைக் குற்றஞ்சாட்டுகிறவர்களுக்கு முன்னால் அவர் வாயைத் திறவாதிருந்தார். ஏசா. 50:6, அவர்கள் அவரை அவமானப்படுத்தினர் என்று தீர்க்கதரிசி கூறுகின்றான். சங். 22 பிரகாரம், அவர் சிலுவையில், ”என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்“ என்று கதற வேண்டியவராயிருக்கிறார். நேற்று முந்தைய நாள் பகல் அவர் அப்படி கதறினாரா?சங். 22:18, அவருடைய வஸ்திரங்களை அவர்களுக்குள்ளே பங்கிட வேண்டும். அவர்கள் அப்படி செய்தார்களா? சங். 22:7,8 அவருடைய விரோதிகளால் அக்காலத்து சபையால் - அவர் பரியாசம் பண்ணப்பட வேண்டும். மறுபடியும் சங். 22-ல் அவருடைய எலும்புகளில் ஒன்றாகிலும் முறிக்கப்படுவதில்லை. ஆனால் ”என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்“. ஏசா. 53:12, அவர் அக்கிரமக்காரருக்கு நடுவில் மரிப்பார் என்று கூறுகிறது. ஏசா. 53:9, அவர் ஐசுவரியவான்களிடையே அடக்கம் பண்ணப்படுவார் என்றுரைக்கிறது. சங். 16:10, ”அவருடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடேன்; என்னுடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன்“ என்கிறது. மல்கியா. 3-ல் கூறப்பட்டவன் ”இவருக்கு முன்னோடியாயிருந்த மனிதன் அல்லவா?'' என்றெல்லாம் அவர் சொல்லியிருப்பார். வேதத்திலிருந்து இவைகளை அவர் எடுத்துக் கூறுவதைக் கேட்க நான் விரும்பியிருப்பேன். அந்த தீர்க்க தரிசனங்களைப் பாருங்கள்! அவருக்கு முன்னடையாளமாயிருந்தவர் அனைவரையும் அவர் எடுத்துரைத்திருப்பார். ஆதி. 22, எப்படி ஈசாக்கு தேவனுக்கு நிழலாயிருந்தான் என்றும், எப்படி தகப்பனாகிய ஆபிரகாம் தன் சொந்த குமாரனைக் கொண்டு சென்று, விறகுக் கட்டைகளை சேகரித்து அந்த மலையின் மேல் சென்று அவனை பலியாகச் செலுத்தினான் என்றெல்லாம். 61அப்பொழுது தான் அது அவர்கள் இருதயத்தில், ஆழமாகப் பதியத் தொடங்கினது. அந்த நாளுக்குரிய தீர்க்கதரிசனங்களை அவர்கள் ஆராய்ந்து பார்க்காததனால், அவர்கள் புத்தியில்லாதவர்கள் என்றார் அவர், அப்பொழுதுதான் அவர்களுக்கு புரிய ஆரம்பித்தது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நடந்த சம்பவங்கள், அக்காலத்திற்கென அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக இருந்தன என்று அவர்கள் அறிந்து கொண்டனர். சிலுவையிலறையப்பட்ட அவர்களுடைய நண்பனான இயேசு அதன் ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றினார் என்று அவர்களுக்குத் தெளிவானது. ஓ, “அந்த மனிதன் உண்மையாகவே மேசியாவென்றும் அவர் உயிரோடெழுந்திருக்க வேண்டுமென்றும் அவர்கள் அறிந்து கொண்டனர். பாதாளம் அவரைப் பிடித்து வைக்க முடியாது. என்னுடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன்”. தீர்க்கதரிசனத்தின் ஒரு வார்த்தை கூட தவற முடியாது அவர் உயிர்த்தெழுந்தார். 62“அப்படியானால், கல்லறையினருகில் சென்று தூது கொண்டு வந்தவர்கள் கூறியது உண்மையே, அவர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார், அவர் உயிரோடிருக்கிறார். அவர் தான் அந்த மேசியா'' ஏன்? (சகோ. பிரான்ஹாம் தம்முடைய கைகளை மூன்று முறை தட்டுகிறார்) ஒன்றும் தவறவில்லை. ”அவருடைய ஊழியம், மற்றெல்லாமே அக்காலத்தில் என்ன நிகழுமென்று தீர்க்கதரிசிகள் உரைத்திருந்த தீர்க்கதரிசனங்களை பிழையின்றி உறுதிபடுத்தின. ''அப்பொழுது அவர்கள், அவருடன் பேசிக் கொண்டிருந்தவர் சிலுவையிலறையப்பட்ட நண்பனாகிய இயேசு என்று அறிந்துகொண்டனர். எனவே அவர் அவர்களுடன் பேசினபோது, அவர்களுடைய இருதயங்கள் அவர்களுக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்ததில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் ஆறு மைல் தூரம் அவருடன் நடந்தனர், ஆயினும் அது குறுகிய நேரம் போல் அவர்களுக்குக் காணப்பட்டது. 63அவர்கள் செய்த வேறொன்று. தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலைக் குறித்து அவர்கள் ஆறு மணி நேர பிரசங்கம் ஒன்றைக் கேட்டனர் என்று உங்களுக்குத் தெரியுமா? அதை தான் அவர் அவர்களுடன் வழியில் பேசிக் கொண்டு சென்றார். அவர்கள் பிரயாணப்படத் தொடங்கினவுடனே அவர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அவர் அப்பொழுது எருசலேமில் இருந்தார். எம்மாவூர் எருசலேமிலிருந்து ஏறக்குறைய அறுபது பர்லாங்கு தூரம் இருந்தது. எம்மாவூரை அடைய சுமார் ஆறு மணி நேரம் பிடிக்கும். அவர் ஆறு மணி நேரமாக பிரசங்கம் செய்து தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலை உறுதிபடுத்தினார். எனவே அவர்கள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதலின் பேரில் ஆறு மணி நேர பிரசங்கம் ஒன்றைக் கேட்டனர். என்னுடைய மூன்று மணி நேர பிரசங்கத்தை ஆட்சேபிக்காதீர்கள். ஆனால் கவனியுங்கள். அவர்கள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலின் பேரில் ஆறு மணி நேர பிரசங்கத்தைக் கேட்டனர். 64அப்பொழுது நேரமானது சாயங்காலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். அந்த சாயங்கால நேரத்தில்தானே, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று எபி. 13:8-ல் கூறியுள்ளதைக் காணும்படி அவர்களுடைய கண்களைத் திறந்தார். சாயங்கால நேரத்தில் தீர்க்கதரிசனங்களின் மூலம் சம்பவங்கள் தெளிவாக்கப்படுகின்றன. இக்காலத்திற்கென அளிக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை நீங்கள் விசுவாசிப்பீர்களானால், இக்காலத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்பதை நீங்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வீர்கள். “புத்தியில்லாதவர்களே, தீர்க்கதரிசிகள் மேசியாவைக் குறித்து கூறினவைகள் நிறைவேறுமென்று விசுவாசிக்கிறதற்கு மந்த இருதயமுள்ளவர்களே (நீங்கள் அதை ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறீர்கள்). அவை யாவும் நிறைவேற வேண்டுமல்லவா?'' தீர்க்கதரிசிகள் கூறிய அனைத்தையும் அவர் எடுத்துக் காண்பித்தார். அப்பொழுது அவர்களுக்கு புரிந்து விட்டது. அவர் அவர்களை விட்டு கடந்து செல்வது போல் சென்றார். அவர்கள் இந்த மனிதனை விரும்பினர். அவர்கள், ''நீர் எங்களுக்கு நன்றாக புத்தி புகட்டினர். அவர் எங்கோ உயிரோடிருப்பார் என்று நாங்கள் நினைக்கவேயில்லை''. அவருடன்தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவரை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அவர் அவர்களை துக்க முகத்துடன் பார்த்து விட்டு, அப்புறம் நடந்து செல்ல தலைப்பட்டார். அவரை அவர்கள் அழைக்க வேண்டுமென்று அவர் காத்திருந்தார். இன்றிரவும், நீங்கள் அவரை அழைக்க வேண்டுமென்று அவர் காத்துக் கொண்டிருக்கிறார். 65கவனியுங்கள், அவர்களுடைய மேசையில் ஐக்கியங்கொள்ள அந்த சீஷர்கள் அவரை அழைத்தபோது, சிலுவையிலறைப்படுவதற்கு முன்பு அவர் செய்த ஒன்றைபோல் அப்பொழுது செய்தார். அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர் அதை செய்யும் விதத்தை அவர்கள் அறிந்திருந்தனர். அவர் முன்பு என்ன செய்தாரென்று அவர்களுக்குத் தெரியும். அவர் முன்பு செய்தது போலவே அப்பொழுதும் செய்தார். “அது அவர்'' என்று அவர்கள் எழுந்திருந்து கூச்சலிடத் தொடங்கினர். உடனே அவர் மறைந்து போனார். அவர்கள் ஆறு மணிநேரம் பிரயாணம் செய்து அவருடைய பிரசங்கத்தைக் கேட்டனர். ஆனால் அவர் மெய்யாகவே உயிர்த்தெழுந்துவிட்டார், அவர் உயிரோடிருக்கிறார் என்று மற்றவர்களுக்கு அறிவிக்க, அந்த தூரத்தை மறுபடியும் கடக்க அவர்களுக்கு இருபது நிமிடம் மாத்திரமே ஒருக்கால் பிடித்திருக்கும். 66நண்பர்களே, இது மல்கியா 4, லூக்கா 17, யோவான் 15, இன்னும் அநேகம். வெளி, 10. இவைகளின் நிறைவேறுதலாக இருக்கிறது. இக்காலத்தினோடு அநேக தீர்க்கதரிசனங்களை பிழையின்றி பொருத்தலாம். மேலும் மாற்கு, மத்தேயுவில், வானத்தில் பெரிய அடையாளங்கள் காணப்படும் என்று அவர் கூறியுள்ளார், ஜனங்கள் அதை 'பறக்கும் தட்டுகள்' என்றழைக்கின்றனர். சிந்தனை எவ்வளவு வேகமாகச் செல்லக் கூடுமோ அவ்வளவு விரைவில் அவை மறைந்துவிடுகின்றன. அவரால் எழுத முடியும். பேச முடியும், அவர் விரும்பும் எதையும் செய்யமுடியும். “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரான” அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம். அநேக காட்சிகள் பூமிக்கு வருதல், கூர் நுனிக் கோபுரங்கள், புகை வானத்திற்கு எழும்பி நீர் துளிகள் இல்லாத இடத்தில் முப்பது மைல் உயரத்தில் செல்லுதல். அது நிகழுவதற்கு ஒன்றரை ஆண்டுகட்கு முன்னமே அது முன்னறிவிக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை திருப்பிப் பார்த்து யார் கீழே நோக்கிப் பார்க்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். கூறப்பட்ட ஒரு வார்த்தையும் தவறவில்லை அது உண்மையென்று எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையும் உறுதிப்படுத்துகின்றது. மறுபடியும் இது சாயங்கால நேரமாயுள்ளது. இன்றிரவும் அவர் கிருபையாய் திரும்பி வந்து அன்று செய்தது போலவே இன்றும் ஏதாவது செய்கிறாரா என்று பார்க்கலாம். இப்பொழுது ஜெபம் செய்து அவரை நாம் கேட்போம். உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசனத்தால் சம்பவங்கள் தெளிவாக்கப்படுகின்றன. 67சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களுக்குதவி செய்யும். அன்புள்ள தேவனே, நாங்கள் அறிய வேண்டிய காரியங்களை அறிந்து கொள்ளவும், உமது வார்த்தையை புரிந்து கொள்ளவும் எங்களுக்குதவி செய்யும், இப்பொழுதும் ஆண்டவரே, இரண்டாயிரம் ஆண்டு காலமாக, எழுதி வைக்கப்பட்டுள்ள புஸ்தகங்களின் மூலமாக நாங்கள் பிரசங்கங்களைக் கேட்டு வந்திருக்கிறோம். இந்த கடைசி நாட்களில் அது மீண்டும் பழைய நிலைக்கு வந்து, இப்பொழுது சாயங்கால நேரமாயுள்ளது. மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், இன்னும் அநேகர் காலங்கள் தோறும் உம்முடன் பேசி வந்துள்ளனர். அந்த பாதையின் வழியாக நாங்கள் இந்த மகத்தான நாளை அடைந்திருக்கிறோம். தீர்க்கதரிசி கூறின விதமாக, அந்த நாள் பகலுமல்ல, இரவுமல்ல, ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும். இயேசு கல்லறையினின்று உயிர்த்தெழுந்து, சீமோனுக்கும் ஸ்திரீகளுக்கும் பிரத்தியட்சமாகி, தம்மை உயிருள்ளவராகக் காண்பித்தார். அது காலை நேரமாயிருந்தது, அவர் மீண்டும் சாயங்காலத்தில் வந்தார். பகல் நேரத்தில் அவர் எம்மாவூர் சீஷருடன் நடந்து சென்று, அவர்களுடைய குருட்டுத் தன்மைக்காக அவரைக் கடிந்து கொண்டார். ஆனால் சாயங்கால நேரத்தில் தான் அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். 68தேவனே, நாங்கள் வார்த்தையின் பேரில் ஐக்கியங் கொண்டிருக்கும் இன்றிரவில் எங்கள் மத்தியில் வாரும். தேவனே, ஜனங்களில் பெரும்பாலோர் இதை விசுவாசிப்பதில்லை. ஆயினும், ஒரு சிலரை நீர் அழைத்து அவர்களை நித்திய ஜீவனுக்கென்று நியமித்துள்ளதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ''பிதாவானவர் எனக்கு கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும்'' என்று நீர் கூறியிருக்கிறீர். ஆண்டவரே, சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்க நீர் அனுமதித்திருக்கும் இக்காலத்தில், புறப்பட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்களில் ஒன்று கூட எந்த நேரமும் தவறினதில்லை. அப்படியானால் அது நீராகத் தான் இருக்கமுடியும். ஏனெனில் எந்த ஒருவனும் இவ்வளவு பிழையற்றவனாக இருக்கமுடியாது. வேதாகமம் ஆயிரத்தறுநூறு ஆண்டுகளாக நாற்பது வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டு, அதில் ஒரு பிழையும் இல்லாதது போன்றுள்ளது இது. அன்புள்ள தேவனே, எபி. 13:8ன்படி, நீர் நேற்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்பதை நீர் இன்றிரவு வெளிப்படுத்த விரும்புகிறேன், அன்று நீர் செய்த அதே கிரியைகளை இன்றும் நீர் செய்வீராக. அவ்வாறு நீர் வாக்களித்துள்ளீர். “இந்த கடைசி நாட்களில், உலகம் சோதோம் கொமோராவைப் போன்று சீர் கெட்டதாயிருக்கும்'' என்று நீர் கூறியிருக்கிறீர். இக்காலத்து பையன்கள் பெண்களைப் போல் உடை உடுத்தி பெண்களைப் போல் காணப்படுகின்றனர். அவ்வாறே பெண்களும் ஆண்களைப் போல் காணப்பட முயல்கின்றனர். இந்த சீர்கெட்ட காலத்தில் ஆண்களையும் பெண்களையும் பார்க்கும் போது பால் உணர்ச்சி வசீகரம் (Sex appeal) வழிபாட்டின் விக்கிரமாக அமைந்துள்ளது. சுவிஷேம் ஒரு வழிபாட்டின் விக்கிரமாக அமைந்துள்ளது. சுவிசேஷம் ஒரு பக்கம் தள்ளி வைக்கப்பட்டு இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில் நிர்வாணம் காணப்படுகின்றது. ஓ, தேவனே, என்ன ஒரு நேரம்; கர்த்தராகிய இயேசுவே, வாரும். உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தித் தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். 69இப்பொழுது, உங்கள் தலைகள் வணங்கி, உங்கள் கண்கள் மூடியிருக்கும் போது, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். தேவன் இங்கிருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? இன்றைக்கு நிகழும் காரியங்கள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாயிருக்கின்றன என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் அன்று மாமிசத்தில் வெளிப்பட்ட போது அங்கு செய்த அதே கிரியைகள், மீண்டும் இக்காலத்தில் செய்யப்படும் என்று விசுவாசிக்கிறீர்களா? தீர்க்கதரிசி அவ்வாறு கூறியிருக்கிறார். வேதமும் அவ்வாறு கூறுகிறது. எல்லா வேதவாக்கியங்களும் நிறைவேற வேண்டியதாயுள்ளன. அவை தவறாது. அவர் தம்மை எவ்வாறு அடையாளம் காட்டினார்? தீர்க்கதரிசியாயிருந்த மோசே கூறினதன் மூலம் அவர் ஜனங்களின் இருதயங்களில் மறைந்திருந்த இரகசியங்களை அறிந்தார். அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டபோது அவர் திரும்பிப் பார்த்து, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது'' என்றார். சீமோன் பேதுரு அவரிடம் வந்தபோது அவனுடைய பெயரை அவரறிந்து, அவன் யாரென்றும் அவன் தகப்பன் யாரென்றும் கூறினார். அதே அருமையான இயேசு மரித்தவராயிராமல், சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறார். தேவனுக்கு துதியுண்டாவதாக! இந்த சாயங்கால நேரத்திலே அவர் நம்மை அழைத்து மறுபடியும் ஒன்று கூட்டியுள்ளார் என்று நான் விசுவாசிக்கிறேன். 70ஓ, கர்த்தராகிய இயேசுவே, எங்கள் மத்தியில் வாரும். எங்களைக் கடந்து சென்று விடாதேயும். நீர் வந்து, இந்த இரவு முடியுமட்டும், முழு இரவும் எங்களுடன் தங்கியிருந்து, நாளை காலை நாங்கள் உம்முடன் கூட சென்று, உம்மை உயிர்த்தெழுதலின் வல்லமையில் நாங்கள் அறிந்து கொள்ளவும், உமது அன்பும், கிருபையும், இரக்கமும் எங்களுடன் கூட இருக்கும்படி செய்யும். ஓ நித்திய தேவனே, இவைகளை அருளும். தேவன் ஒருவர் மாத்திரமே இவைகளை அருளமுடியும் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். பயபக்தி மிக்க இந்த நேரத்திலே இதை நாங்கள் கூற விரும்புகிறோம்: எங்கள் பிதாவாகிய தேவனே, எங்கள் சரீரம் உமக்கு ஒரு எளிய கூடாரமாயுள்ளது, ஆனால் ஆண்டவரே, பரிசுத்தமாக்கும் உம்கிருபை உமது பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது வந்து, எங்களுக்குள் காணப்படும் எல்லா சந்தேகங்களையும், எல்லா தேவ நம்பிக்கையில்லாத தன்மைகளையும் சுத்திகரித்து, நாங்கள் சந்தேகம் நீங்கப் பெற்றவர்களாய், தைரியமாய் வெளிவந்து, பேதுருவைப் போல் ''நீரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற கிறிஸ்து'' என்று அறிக்கை செய்ய அருள்புரியும். 71ஆண்டவரே, உம்முடைய வசனமே சத்தியமென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆண்டவரே, இந்த ஜெப வரிசையை நாங்கள் தொடங்கு முன்பு, உம்மை நீர் எங்களுக்கு வெளிப்படுத்துவதை நாங்கள் காணட்டும். லோத்தின் நாட்களில் வெளியே அழைக்கப்பட்ட குழுவாகிய ஆபிரகாம், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த குமாரனுக்காக காத்துக் கொண்டிருந்த போது, லோத்து ஸ்தாபனமாகிய தேசத்தில் இருந்து கொண்டு, நவீன பில்லி கிரகாம், ஓரல் ராபர்ட்ஸ் கூறுபவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் ஆபிரகாம் ஒரு சஞ்சாரி. அவனுக்கு எவ்வித ஸ்தாபனமுமிராமல், ஒரு சிறு குழுவாக அவன் சுதந்தரிக்கப் போகும் தேசத்தையடைய பயனப்பட்டுக் கொண்டிருந்தான். “சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்”. ஒரு நாள் மரத்தின் நிழலில் அவர்கள் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்த போது, தேவன் மனித ரூபத்தில் இறங்கி வந்தார். இரண்டு தூதர்கள் சோதோமிற்கு சென்றனர். மாம்சத்திலிருந்த தேவன் தம்மை யாரென்று நிரூபித்துக் காண்பித்தார். அவர், ''ஆபிரகாமே, உன் மனைவியாகிய சாராள் எங்கே?'' என்று கேட்டார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு அவன் ஆபிராம் என்றும் அவள் சாராய் என்றும் அழைக்கப்பட்டாள்... சாராய் என்றல்ல. சாராள் என்பதற்கு “ராஜ குமாரத்தி” என்று அர்த்தம். நீர் அவனை ஆபிரகாம்... ஜாதிகளுக்கு தகப்பன் என்றழைத்தீர். நீர், ''நான் உன்னிடத்தில் திரும்ப வருவேன்'' என்று கூறினீர். 72தேவனே, அந்த தீர்க்கதரிசியின் இருதயம் எவ்வாறு துள்ளியிருக்கும் நீர் யாரென்பதை அவன் உடனே அறிந்து கொண்டான். அவன் உம் கால்களைக் கழுவி, அவனிடமிருந்த சிறந்த ஆகாரத்தைக் கொண்டு வந்து உம் முன் வைத்ததில் வியப்பொன்றுமில்லை, அது தேவன் என்பதை அவன் அறிந்திருந்தான், அப்பொழுது அவர், ''சாராள் எங்கே?'' என்று தெரியாதது போல் கேட்டார். ஆபிரகாம், “உமக்கு பின்னால் உள்ள கூடாரத்தில் இருக்கிறாள்” என்று கூறினான். என்ன நடக்கப் போகிறது என்று நீர் அறிவித்தீர். அவள் தன் இருதயத்தில் சந்தேகித்தாள், அப்பொழுது நீர் ஆபிரகாமிடம், “இவை எப்படி முடியும்?” என்று சாராள் தன் இருதயத்தில் சந்தேகிக்கிறதென்ன? “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?'' என்றீர். ஓ தேவனே! வார்த்தையாக வெளிப்பட்ட தேவனாகிய இயேசுவே, நீர், “சோதோமின் நாட்களில் நடந்தது போல புறஜாதியாரின் உலகம் - புறஜாதிகளின் காலம் - அழிவதற்கு சற்று முன்பு, உலகம் அந்நிலையில் தான் இருக்கும் என்று கூறியிருக்கிறீர். இதோ நாங்கள், எல்லா விதத்திலும் சோதோமியரைப் போன்றிருக்கிறோம், அந்த நேரத்தில் மனுஷகுமாரன் - அவர் எப்பொழுதும் 'தீர்க்கதரிசி' என்று குறிப்பிடப்படுகிறார் - வெளிப்படுவார் என்று நீர் சொல்லியிருக்கிறீர். ஓ, தேவனே, உமது வார்த்தையை நிறைவேற்றுவீராக. உம்மை விசுவாசிக்கும் பிள்ளைகளாகிய நாங்கள் உத்தம இருதயத்துடன், நீர் எங்களுக்கு விசுவாசத்தை அளிப்பதற்காக காத்திருக்கிறோம். அப்பொழுது, ஜெபவரிசையை நாங்கள் தொடங்கும் போது, ஜனங்கள் விசுவாசிப்பார்கள். பிதாவே, இது சாயங்கால நேரம். இருந்தவரும், இருக்கிறவரும், வருகிறவருமான தேவனுடைய குமாரனின் சாயங்கால வெளிச்சம், அவர் கூறியுள்ள தீர்க்கதரிசனத்தின்படி, பிரகாசிக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 73இப்பொழுது வியாதியஸ்தருக்காக ஜெபிக்க நான் ஆயத்தமாயிருக்கிறேன். நான் இங்கு நின்று கொண்டு பொது ஜனங்களுக்கு சவால்விடும் போது... தொலை பேசியில் இணைக்கப்பட்டவர்களையும் சேர்த்து - தேவன் இன்னமும் தேவனாயிருக்கிறார் என்பது அற்புதமாயுள்ளது. அவர் தவறமாட்டார். அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றுவார். அதை செய்ய அவர் ஒருபோதும் தவறமாட்டார், ஏனெனில் அவர் அவ்வாறு செய்வதாக வாக்களித்துள்ளார். எனவே அவர் கூறியுள்ளதன் பேரில் பயபக்தியான நம்பிக்கையை என்னால் வைக்க முடியும். எனவே, அவருடைய வருகையை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். எந்த நேரத்திலும் அவருடைய பிரசன்னமாகுதலை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், நீங்கள் நினையாத நாழிகையிலே, “உலகம் நினையாத நாழிகையிலே'' அவர் வருவார் என்று அவர் கூறியுள்ளார். எனக்குத் தெரிந்த வரைக்கும்... நான் இப்பொழுது என் கூடாரத்தில் இருக்கிறேன். இங்கு அமர்ந்திருப்பவர்களில் ஒரு சிலரை எனக்குத் தெரியும். சகோ. ரைட்டையும், இங்கு அமர்ந்திருப்பவர்களில் ஒரு சிலரையும் எனக்குத் தெரியும். ஆனால் உங்களில் அநேகரை எனக்குத் தெரியாது. தேவன் இன்றிரவு இதை செய்வார் என்று திண்ணமாக சொல்வதற்கில்லை. கடந்த அநேக ஆண்டுகளாக அவர் செய்து வந்துள்ளதை நாம் கண்கூடாகக் கண்டு வந்திருக்கிறோம். ஆனால் இன்றிரவு அவர் அதை செய்யாமலிருக்கலாம். எனக்குத் தெரியாது. அது அவரைப் பொறுத்தது, அவர் ராஜாதிபத்தியமுள்ளவர். அவர் விரும்புகிறதை அவர் செய்கிறார். அவர் என்ன செய்ய வேண்டுமென்று யாரும் அவருடன் சொல்ல முடியாது. அவர் தமது சித்தத்திலும் தமது வழியிலும் தனியாக ஜீவிக்கிறார். ஆயினும் அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளபடியால், அவர் செய்ய வேண்டுமென்று நான் அவரை வேண்டிக் கொள்கிறேன். எங்களுக்காக அல்ல, இங்குள்ள சில அந்நியர்களுக்காக, பரிசுத்த ஆவியானவர் அவர்களை அபிஷேகிக்க வேண்டுமென்று... அவர் ஒருவேளை நம்மை அபிஷேகிக்கலாம். அவர் எவ்வளவு தான் என்னை அபிஷேகித்தாலும், நீங்கள் விசுவாசிக்கத் தக்கதாக உங்களையும் அவர் அபிஷேகிக்க வேண்டும். 74இப்பொழுது ஜெப வரிசையைத் தொடங்க விரும்புகிறேன். என்னால் இயன்றவரை வியாதியஸ்தருக்காக ஜெபிக்க நான் விரும்புகிறேன். நாம் ஒரு வரிசையை அமைத்து, ஜனங்களை இங்கு வரும்படி அழைத்து, வியாதியுற்றோர் அனைவருக்காகவும் ஜெபிக்கலாம். நமது போதகர் சகோதரர்களையும் நம்முடன் சேர்ந்து கொள்ள அழைத்து, அவர்களும் உங்கள் மேல் கைகளை வைக்கும்படி கேட்டுக் கொள்ளலாம். அப்படி நாம் நிச்சயம் செய்யலாம். அல்லது நாம் பிதாவை வேண்டிக் கொள்ளலாம். அவர் ஒருவர் மாத்திரமே உங்களுக்கு ஏதாவதொன்றை செய்ய முடியும். ஏனெனில் என் கரங்கள் உங்கள் கரங்களைப் போன்று மனித கரங்கள் மாத்திரமே. மனித கரங்கள் அதை செய்வதில்லை. தேவனுடைய வார்த்தையின் பேரிலுள்ள விசுவாசமே அதை செய்கிறது. அதில் விஞ்ஞானப் பூர்வமானது ஒன்றுமில்லை. அது மிகவும் விஞ்ஞானப் பூர்வமற்றதாய் உள்ளது. கிறிஸ்தவன் கொண்டிருக்கும் ஆயுதங்களில் ஒன்றும் கூட விஞ்ஞானப் பூர்வமானதல்ல. அது உங்களுக்குத் தெரியுமா? அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், விசுவாசம், பரிசுத்த ஆவி, இவையனைத்துமே விஞ்ஞானத்தால் காண முடியாதவை. ஆனால் இவை மாத்திரமே உண்மையுள்ளதும் நிலைத்திருக்கிறதுமாயுள்ளன. நீங்கள் காணக் கூடிய ஒவ்வொன்றும் பூமியிலிருந்து புறப்பட்டு வந்து பூமிக்கே சென்று விடுகிறது. ஆனால் உங்கள் கண்களால் காணக் கூடாதவை அனைத்தும் தங்களை உண்மையென்று நிரூபிக்கின்றன. அதுதான் நித்தியமெனும் உலகம். 75தேவன் இந்த செய்திக்குப் பிறகு தம்மை வெளிப்படுத்தி, தம்மை உயிருள்ளவராகக் காண்பித்து, ஆதியில் அவர் செய்த அதே கிரியைகளைச் செய்வாரானால், அவரை விசுவாசித்து, உங்கள் சுகத்தை ஏற்றுக் கொள்வீர்களா? தேவன் அதை அருளுவாராக. இங்குள்ளவர்களை - அது யாராயிருந்தாலும், நீங்கள் எங்கிருந்து வந்தாலும் - இந்த செய்தி உண்மையென்று நீங்கள் பயபக்தியுடன் விசுவாசிக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்திற்காக தேவன் வேதாகமத்தில் வைத்திருக்கும் செய்தியாகும் இது... இயேசு கிறிஸ்து இன்றிரவு இங்கிருக்கிறாரென்றும் அவர் உயிரோடிருக்கிறாரென்றும். நீங்கள் எல்லோரும் என்னை அறிவீர்கள். நான் இந்தப் பட்டினத்தில் தான் வளர்ந்து வந்தேன். எனக்கு இலக்கணப்பள்ளி கல்வியும் கூட கிடையாது. அது முற்றிலும் உண்மை. என்னை நீண்ட காலமாக நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு முன்னால் நான் உத்தமும் நேர்மையுமாய் நடந்து வந்திருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் ஒரு மாய்மாலக்காரன் அல்ல. என்னில் குற்றம் கண்டுபிடிப்பவரும் கூட என்னை அவ்வாறு அழைப்பதில்லை, அவர்கள், ''நீ மாய்மாலக்காரனல்ல, ஆனால் நீ கூறுவது தவறு. அது அறியாமையின் காரணமேயன்றி, வேண்டுமென்றல்ல'' என்கின்றனர். அறியாமையின் காரணமாக தவறு செய்கிறேன் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் என் செய்தி உண்மையென்று தேவனுடைய வார்த்தை சாட்சி பகருகின்றது. அது யாரென்று உங்களுக்கு அறிவிக்கும். அது நானல்ல என்று நான் கூறுவதை நீங்கள் தெளிவாய் கேட்டிருக்கிறீர்கள். அப்படியானால் அது அவராயிருக்க வேண்டும். அது சரியா? தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். இந்தப் பக்கம் பாருங்கள். தேவனை விசுவாசியுங்கள், நீங்கள் தேவனை விசுவாசித்தால், அவர் உங்களுக்கு அருளுவார். அவர் முன்பு செய்தது போலவே இப்பொழுதும் செய்வாரானால், அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 76அதை விசுவாசிக்கிறீர்களா? எனக்கு முன்பாக ஒரு ஸ்திரீ அமர்ந்திருக்கிறாள். அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கண்களிலிருந்து நீர் மல்கின்றது. அவள் யாரென்று எனக்குத் தெரியாது. அவளை நான் பார்த்தது கிடையாது. நான் உனக்கு அந்நியன், உன் பாவத்தை - அது எதுவாயிருந்தாலும்... தேவன் அறிந்திருக்கிறார் என்று விசுவாசிக்கிறாயா? உன் பாவம் என்னவென்றும், நீ என்ன செய்திருக்கிறாய் என்றும், நீ என்ன செய்திருக்கக் கூடாதென்றும், அல்லது உன் வாஞ்சை என்னவென்றும், அது எதுவாயிருப்பினும், அவர் எனக்கு வெளிப்படுத்தித் தர முடியும் என்று விசுவாசிக்கிறாயா? அவர் அப்படி செய்வாரானால், அது உன்னை அவர்பால் விசுவாசிக்கச் செய்யத் தூண்டுமா? அது அவராகத்தான் இருக்க முடியும் என்று விசுவாசிப்பாயா? அது அவர்தான் என்று ஏற்றுக் கொள்வாயா? உன்னுடைய பாவம் உன்னைத் தொந்தரவு படுத்தவில்லை. அதை நீ அறிக்கை செய்துவிட்டாய். நீ பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற விரும்புகிறாய். அதை நீ பெற்றுக் கொள்வாய். அது அவள் மேல் அசைவதை நான் கண்டேன். நான் அந்த ஸ்திரீயை பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் உங்களுக்கு பரிசுத்த ஆவியின் அசைவைக் காண்பிக்க விரும்புகிறேன். இங்கே பாருங்கள், என் கால்களின் கீழ் இந்த ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். நான் அதை சொன்னபோது, இந்த ஸ்திரீயும் அதையே விரும்பிக் கொண்டிருக்கிறாள் - பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை, சகோதரியே, அதைப் பெற்றுக் கொள்வாய் என்று விசுவாசிக்கிறாயா? அப்படியானால் உன் கையையுயர்த்து. அந்த ஸ்திரீயை என் வாழ்க்கையில் இதுவரை கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை. 77தலையைக் கீழே தொங்கவிட்டு அவருடைய கழுத்துப் பட்டை (collar) சரியாக பொருந்தியிராமல், இங்கு உட்கார்ந்திருக்கும் மனிதனைப் பாருங்கள். நீங்கள் மூத்திரப்பை கோளாறினால் அவதியுறுகிறீர்கள். தேவன் உங்களை சுகப்படுத்த முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கையையுயர்த்தி அதை ஏற்றுக் கொள்ளுங்கள். சரி, தேவன் உங்கள் விண்ணப்பங்களை அருளுவாராக. இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த வாலிபன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விரும்புகிறார். ஐயா, தேவன் அதை உங்களுக்கு அளிப்பார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கோடு போட்ட டையானது பின்னால் தொங்கிக் கொண்டிருக்கிறது. தேவன் அதை அருளுவார். இங்குள்ள மனிதன் தன் மனைவிக்காக ஜெபம் செய்து கொண்டிருக்கிறார். அவள் ஒரு நிலையத்தில் இருக்கிறாள். தேவன் அவளை சுகமாக்கி சரிப்படுத்த முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசித்தால் அதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். தொண்டையில் கை வைத்துக் கொண்டிருப்பவரே, உங்களைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கும் இருதயக் கோளாறையும் வயிற்றுக் கோளாறையும் தேவன் சுகமாக்க வல்லவர் என்று விசுவாசிக்கிறீர்களா? அங்கு, நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையில், அது உங்களை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது. அது உண்மையா? அவர் உங்களை சுகமாக்குகிறார், என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள். ஆமென். 78பாருங்கள், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். என்னைத் தெரியுமா என்று அங்குள்ளவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அங்குள்ளவர்களை எனக்குத் தெரியாது. ஆனால் தேவன் அவர்களை அறிவார். ஆமென். அங்கே சுவற்றின் பக்கத்திலுள்ள ஒளி அங்கு உட்கார்ந்திருக்கும் மனிதனின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவர் முதுகெலும்பு கோளாறினால் அவதியுறுகிறார். அவர் இந்த இடத்தை சேர்ந்தவரல்ல. அவர் ஜார்ஜியாவிலிருந்து வந்திருக்கிறார். திரு. டன்கன் அவர்களே, உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். தேவன் உங்கள் முதுகு கோளாறை குணப்படுத்துவார். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னைப் பார்த்து கொண்டே பின் வரிசையில் உட்கார்ந்திருக்கும் அந்த மனிதனுக்கும் முதுகு கோளாறு உள்ளது. அவரை எனக்குத் தெரியாது. அவருடைய பெயர் திரு. தாம்ஸன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஐயா, நான் உங்களுக்கு அறிமுகமில்லாதவன். அது உண்மை. நீங்கள் அங்கு அமர்ந்துகொண்டு, ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் முதுகு கோளாறு சுகமாகிவிட்டது. இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். 79“சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும். இன்றிரவு அவர் இங்குள்ளதை நீங்கள் காண முடியவில்லையா? அவரே அந்த மகத்தான இருக்கிறேன் என்பவர். அவர் நேற்றும் என்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்தி, தீர்க்கதரிசனத்தில் தம்மை அடையாளம் காட்டுகிறார் என்றும் நீங்கள் உறுதியாய் நம்பி, திருப்தியடைந்திருக்கிறீர்களா? உங்கள் கண் பார்வையைக் குறித்து கவலைப்பட வேண்டாம். தேவன் வியாதியஸ்தரையும் அவதியுறுபவர்களையும் சொஸ்தமாக்குகிறார். இங்குள்ள எத்தனை பேர் வியாதிப்பட்டிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை நான் பார்க்கட்டும். அது மிகவும் பிரயாசமாக தென்படுகிறது. நீங்கள் யாராகிலும் ஜெப அட்டை வைத்திருக்கிறீர்களா? உங்களையெல்லாம் எப்படி இங்கு அழைக்க முடியுமென்று எனக்குத் தெரியவில்லை. உங்களெல்லாருக்கும் நான் ஜெபிக்க விரும்புகிறேன். ஆனால் எப்படி முடியும் என்றுதான் தெரியவில்லை. அந்த சுவற்றினருகில் உள்ள நெருக்கத்தைப் பாருங்கள். அங்கு ஒரு வரிசை நெருக்கமாயிருக்கிறதென்றால், மற்ற வரிசையும் கூட நெருக்கமாயிருக்கிறது. எனவே எல்லோரும் முன்னால் வர முடியாமல் அங்கேயே நின்றுவிட்டனர். 80கவனியுங்கள், நான் கூறுவதைக் கேளுங்கள். நான் கர்த்தரின் நாமத்தில் கூறின எதுவும் இதுவரை நிறைவேறாமலிருந்ததுண்டா? ஒவ்வொரு முறையும் அது நிறைவேறியுள்ளது. அது சரியா? என் வாழ்க்கையில் ஒரு முறையாவது நான் உங்களில் யாரிடமும் பணம் கேட்டதில்லை. கேட்டிருக்கிறேனா? என் வாழ்க்கையில் நான் காணிக்கை எடுத்ததேயில்லை. நான் பணத்திற்காக இங்கில்லை. உங்களை ஏமாற்ற இங்கு நான் வரவில்லை. இந்நேரத்திற்குரிய தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்தவே நான் இங்குள்ளேன். நான் உங்களிடம் சத்தியத்தை எடுத்துரைத்தேன். அது சத்தியமென்று தேவன் சாட்சி பகர்ந்துள்ளார். இப்பொழுது நான் உங்களிடம் கூறுகிறேன். வேத வாக்கியங்கள் உரைக்கிறதாவது. “ஒரு விசுவாசி வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தால் அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று இயேசு கூறியுள்ளார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் தேவனுடைய சமூகம் இருக்கும் அவ்விடத்தில் அவர் இங்கேயே அதை நிறைவேற்றுவார் என்று விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? 81இப்பொழுது ஒருவர் மேல் ஒருவர் கைகளை வையுங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள். ஜெபம் செய்ய வேண்டாம் கைகளை மாத்திரம் வையுங்கள். நாட்டின் மற்றைய பாகங்களில் உள்ளவர்களுக்கு கூட நானும் என் கைகளை இந்த கைக்குட்டைகளின் மேல் வைக்கிறேன். நீங்கள் என்னை ஒரு நிமிடம் பாருங்கள். தேவன் எதை செய்யாமல் விட்டிருக்கிறார்? நாம் இப்பொழுது படித்த வேத வாக்கியங்களும், கூறின தீர்க்கதரிசனங்களும், இயேசு தீர்க்கதரிசனங்களின் மூலம் தம்மை அடையாளம் காண்பித்தார் என்று தெரிவிக்கின்றன. நாம் வாழும் இந்நேரத்தைப் பாருங்கள். அதைக் குறித்து கடந்த மூன்று வாரங்களாக நாம் சிந்தித்தோம். கள்ளதீர்க்கதரிசிகளைக் குறித்தும், அவர்களுடைய அற்புதங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்படியாக அமைந்திருக்கும் என்றும், தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டது என்றும், இப்பிரபஞ்சத்தின் தேவன் தன் பொய்யினால் மக்களின் இருதயங்களை குருடாக்கினான் என்றும் இவையாவும் லவோதிக்கேயா சபையின் காலத்தில் நிறைவேறுமென்று தேவனே தீர்க்கதரிசனங்கள் மூலமாக கூறியுள்ளார் என்றும் நாம் பார்த்தோம். எதுவுமே நிகழாமல் விடப்படவில்லை. எம்மாவூர் சீஷர்களுடன் பேசின அதே தேவன் இன்றிரவு இங்கு இருந்து கொண்டு, அன்று எவ்வாறு தீர்க்கதரிசி ஜனங்களின் மூலம் தம்மை அடையாளம் காண்பித்தாரோ, அது போலவே இக்காலத்திற்கென முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களின் மூலமாய் இன்று தமது பிரசன்னத்தை அடையாளம் காண்பித்து கொண்டு வருகிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் ஒருவர் மேல் ஒருவர் உங்கள் கைகளை வையுங்கள். உங்களுக்காக நீங்கள் ஜெபம் செய்ய வேண்டாம், யார் மேல் உங்கள் கைகளை வைத்திருக்கிறீர்களோ அவர்களுக்காக உங்கள் சொந்த முறையில் ஜெபம் செய்யுங்கள். அவர்களும் உங்களுக்காக ஜெபம் செய்வார்கள். கவனியுங்கள். எவ்வித சந்தேகமும் கொள்ளவேண்டாம். 82நான் பார்த்துக் கொண்டிருக்கிறதை நீங்கள் மாத்திரம் பார்க்க முடிந்தால் இங்கு நின்று கொண்டு உங்களிடம் பொய் சொல்ல மாட்டேன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் மாத்திரம் அதைப் பார்த்து, உங்கள் விசுவாசம், விஞ்ஞானம் புகைப்படம் பிடித்து ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கும் அந்த மகத்தான பரிசுத்த ஆவியை இழுக்க முடியுமானால், “நீங்கள் மாத்திரம், கட்டிடத்தில் அசைந்து கொண்டு இறங்குவதை ஒரு நங்கூரமான இடத்தை தேடிக் கொண்டிருக்கும் அந்த பரிசுத்த ஆவியை காண முடியுமானால்”! சகோதரனே, விசுவாசி. அவர் வேத வாக்கியங்களின் மூலம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, அது உண்மையென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. யார் மேல் கைகளை வைத்திருக்கிறீர்களோ, அவர்களுக்காக உத்தமமாய் ஜெபியுங்கள். அவர்களும் உங்களுக்காக ஜெபிப்பார்கள். 83அருமையான நசரேயனாகிய இயேசுவே, தேவனுடைய வார்த்தை உரைத்துள்ள வாக்குத்தத்தத்தின் மூலம், நீர் இங்கிருக்கிறீர் என்று உணருகிறோம். ''எங்கே இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்திலே கூடியிருக்கிறார்களோ“, அவர்கள் மத்தியிலே நான் வாசமாயிருக்கிறேன். விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று நீர் கூறியிருக்கிறீர். தொலைபேசியின் அலைகளின் மூலமாகவும் கூட அந்த மகத்தான பரிசுத்த ஆவி சபையோர் அனைவரிடமும் செல்வதாக. இப்பொழுது நாம் கூடாரத்தில் காணும் அதே பரிசுத்த ஒளி, எல்லோர் மேலும் இறங்கி, இப்பொழுது சுகம் பெறுவார்களாக. இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில், நாங்கள் சத்துருவாகிய பிசாசை கடிந்து கொள்ளுகிறோம். இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளின் மூலமாகவும், அவருடைய மரணத்தின் மூலமாகவும், மூன்றாம் நாளில் நிகழ்ந்த அவருடைய வெற்றிகரமான உயிர்த்தெழுதலின் மூலமாகவும் அவன் தோற்கடிக்கப்பட்டுவிட்டான் என்று நாங்கள் சத்துருவிடம் கூறுகிறோம். ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகள் கழித்து அவர் உயிருள்ளவராக இன்றிரவு எங்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை அவர் நிரூபித்து காண்பித்திருக்கிறார். ஜீவனுள்ள தேவனின் ஆவி ஒவ்வொரு இருதயத்தையும் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைத்து, இந்த கூடாரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த மகத்தான ஒளியினால் அடையாளம் கண்டுகொள்ளப்படும் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் வல்லமை ஒவ்வொருவர் மேலும் விழுவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தேவனுடைய மகிமைக்காக இதை அருள்வீராக. இப்பொழுது, நாங்கள் ஜெபம் செய்த இந்த கைகுட்டைகள், அது வியாதியஸ்தரிடமும், அவதியுறுபவர்களிடமும், அது யாருக்கு போக வேண்டுமென்னும் நோக்கத்துடன் ஜெபம் செய்யப்பட்டதோ, அவர்களிடம் செல்லட்டும் இப்பொழுது தம்மை அடையாளம் காண்பிக்கும் அதே பரிசுத்த ஆவியானவர் தாமே, அவை வைக்கப்படவிருக்கும் ஒவ்வொரு வியாதியஸ்தரிடமும் தம்மை அடையாளம் காண்பிப்பாராக, தேவனுடைய பிரசன்னம் விசுவாசத்தினால் அவர்களுடைய இருதயங்கள் நிரப்பப்பட்டு அவர்களுடைய சரீரம் சுகம் பெறும் வரையிலும் இருப்பதாக. இதை நாங்கள் தேவனுடைய மகிமைக்கென்றும், இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தின் முன்னிலையிலும், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலும், அவருடைய ஊழியக்காரர் என்ற நிலையில் கேட்கிறோம். ஆமென். 84உங்களுக்கு எவ்வித கோளாறுமிருந்தாலும் கவலையில்லை. தேவனுடைய வார்த்தையானது உங்கள் விண்ணப்பங்களை அருளிவிட்டது என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர்) எல்லா கரங்களும் உயர்த்தப்பட்டுள்ளதைக் காண்கிறேன். நீங்கள் விசுவாசித்தால், ஞாபகங் கொள்ளுங்கள். அது முடிவு பெற்றுவிட்டது. தொலைபேசியின் இணைக்கப்பட்டுள்ளவர்களே, போதகர்கள் உங்கள் மேல் கைகளை வைத்திருக்கும் போதும், நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், அது முடிவு பெற்றுவிட்டது. அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு இக்கூடாரத்திற்குள் இருக்கிறார். அவர் ஜனங்களின் மேல் அசைவாடுவதை நான் கண்டேன். அந்த சுவற்றின் பக்கம் அவர் தோன்றி ஒரு மனிதனின் மேல் இறங்கி, இங்கு வந்து, கட்டிடம் பூராவும் சுற்றி, இருதயங்களிலுள்ள இரகசியங்களை வெளிப்படுத்தி, தமது பிரசன்னத்தைக் காண்பித்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நிரூபிக்கிறார். அவர் மத்தியில் இருக்கிறார். அவர் தேவன், என்றென்றும் தவறாத தேவன். 85நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா? உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் நாம் இப்பொழுது இருக்கிறோம் என்று அறியும் போது, நமது இருதயங்கள் இப்பொழுது கொழுந்துவிட்டு எரிகின்றதல்லவா? அவருக்கே என்றென்றைக்கும் மகிமையும் துதியும் உண்டாவதாக! அவரே சர்வ வல்ல யேகோவாவின் தன்மையின் சொரூபமாயிருப்பவர், அவரே தீர்க்கதரிசியின் கவனத்தைக் கவர அக்கினி ஸ்தம்ப வடிவத்தில் முட்செடியில் இறங்கினவர்; அவரே மலையின் மேல் இறங்கினவர்; மோசேயும் யோசுவாவும் தவிர, மலையைத் தொடும் எவரும் சாக வேண்டும். அவர் இஸ்ரவேல் புத்திரரை வனாந்திரத்தில் வழி நடத்தி சென்றார். இன்று வெளியே அழைக்கப்பட்டுள்ள ஜனங்களுக்கு அது முன்னடையாளமாயுள்ளது. அவரே விஞ்ஞானத்தின் மூலம் தம்மை அடையாளம் காண்பித்திருக்கிறார். அவருடைய கிரியைகளின் மூலம், இந்நாட்களில் அவர் என்ன செய்வார் என்று உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவதன் மூலம், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை பிழையின்றி உறுதிப்படுத்துகிறார். நமது இருதயங்களை நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியச் செய்வதற்கு இது போதுமானதல்லவா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 86நாம் எல்லோரும் ஓரே சிந்தையுடையவர்களாய், எழுந்து நின்று இவ்வாறு கூறுவோம். (சகோ. பிரான்ஹாம் பின்வரும் ஜெபத்தை கூற, அவரைத் தொடர்ந்து சபையோர் இந்த ஜெபத்தை ஏறெடுக்கின்றனர் - தமிழாக்கியோன்). ''நான் இயேசு கிறிஸ்துவை என் இரட்சகராகவும் சுகமளிப்பவராகவும் ஏற்றுக் கொள்கிறேன். அவருடைய கிருபையினால், இந்நேரம் முதற்கொண்டு, ஓ, தேவனே, எந்த அவிசுவாசமும் என் இருயத்தில் நுழையாதிருப்பதாக. ஏனெனில் இந்நாளுக்குரிய தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை நான் கண்டுவிட்டேன். இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் என்றும், இந்நேரத்துக்குரிய வார்த்தையை உறுதிப்படுத்தினவராக அவர் இங்குள்ளார் என்றும் நான் விசுவாசிக்கிறேன். அவரைக் குறித்து எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்கள் எங்கள் மத்தியில் நிறைவேறிவிட்டன. அவரே என் இரட்சகர், என் தேவன், என் ராஜா, எனக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார்''. 87அன்புள்ள தேவனே, எங்கள் சாட்சியைக் கேளும், நாள்தோறும் ஜீவ அப்பத்தை எங்களுக்கு தாரும். ஓ தேவனே, எங்கள் இருதயத்தின் ஆழங்களிருந்து உம்மை துதிக்கிறோம். வல்லவரே, தீர்க்கதரிசியின் தேவனே, உம்மை துதிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். ஓ, என்ன நேரம், என்ன நேரம்! ...நம்பிடுவாய். நம்பிடுவாய், நம்பிடுவாய் எல்லாம் கைக்கூடிடும், நம்பிடுவாய் இப்படி நாம் அந்த பல்லவியைப் பாடுவோமா? இப்பொழுது நான் நம்புகிறேன், இப்பொழுது நம்புகிறேன் எல்லாம் கைகூடிடும், இப்பொழுது நான் நம்புகிறேன் இப்பொழுது நான் நம்புகிறேன், இப்பொழுது நான் நம்புகிறேன் எல்லாம் கைக் கூடிடும், இப்பொழுது நான் நம்புகிறேன் அதுதான் உங்கள் சாட்சியா? நாம் தலை வணங்குவோம். நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை இயேசுவின் பாதத்தில் நாம் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை நாம் மறுபடியும் சந்திக்கும் வரை, தேவன் உங்களுடன் இருப்பராக. 88நாம் தலை வணங்கியிருக்கும் இந்நேரத்தில், ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்க சகோ. வேயில் இங்கு நின்று கொண்டிருக்கிறார். சகோ. வேயில் நமது கூடாரத்துக்காக புஸ்தங்களை எழுதுபவர், மிகவும் விலையுயர்ந்த சகோதரன் அநேக கூட்டங்களில் அவர் என்னுடன் பங்கு கொண்டிருந்திருக்கிறார். ஒவ்வொரு போதகரும் அவருடன் பேச தருணம் கிடைத்தால் நலமாயிருக்கும். நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். போதகர்கள் இங்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வேவ்வேறு சபையிலிருந்து சபையோர் இங்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாம் மறுபடியும் சந்திக்கும் வரை தேவன் உங்களுடன் இருப்பராக என்பதே நாம் ஒருவருக்கொருவர் ஏறெடுக்கும் உண்மையான ஜெபமாயுள்ளது. நாம் தலைவணங்கி, கைகளையுயர்த்தி, இதை மறுபடியும் தேவனுக்காக இனிமையாகப் பாடுவோம். நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை இயேசுவின் பாதத்தில் நாம் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, நாம் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை, தேவன் உங்களுடன் இருப்பராக.